சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு; பொதுமக்கள் தர்ணா போராட்டம் - 34 பேர் கைது
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது. சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை அருகே உள்ள காந்தி நகர் காலனியை சேர்ந்த பொதுமக்கள், மக்கள் அரசு கட்சியின் மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கலெக்டரை சந்தித்து சுடுகாட்டுக்கு இடம் கேட்டு மனு கொடுக்க போவதாக தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் போலீசார், மனு கொடுப்பதற்கு 5 பேர் மட்டும் உள்ளே செல்ல வேண்டும் என்று கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சுடுகாட்டுக்கு இடம் கேட்டு அவர்கள் கோஷமிட்டனர். அப்போது அவர்களிடம் கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். இதற்கு மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘காந்தி நகர் காலனியில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். நாங்கள் ரெயில்வே துறைக்கு சொந்தமான நிலத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்தோம். தற்போது அங்கு பாலம் கட்டியதால் சுடுகாட்டிற்கு இடம் இல்லாமல் தவித்து வருகிறோம். சுடுகாட்டுக்கு இடம் கேட்டு பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று (நேற்று) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்‘ என்றனர்.
Related Tags :
Next Story