ஓசூர் அருகே பிடிபட்ட காட்டுயானையை முதுமலை வனப்பகுதியில் விட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு


ஓசூர் அருகே பிடிபட்ட காட்டுயானையை முதுமலை வனப்பகுதியில் விட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 26 Aug 2019 10:45 PM GMT (Updated: 26 Aug 2019 11:51 PM GMT)

ஓசூர் அருகே பிடிபட்ட காட்டுயானையை முதுமலை வனப்பகுதியில் விட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கூடலூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு, சூளகிரி பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சூளகிரி பகுதியில் 18 வயது ஆண் காட்டுயானை முகாமிட்டு, இதுவரை 5 பேரை தாக்கி கொன்றுள்ளது. இதனால் மனிதர்களை கொல்லும் காட்டுயானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி தலைமையிலான வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

பின்னர் கும்கி யானைகள் மாரியப்பன், பரணி உதவியுடன் லாரியில் காட்டுயானை ஏற்றப்பட்டது. தொடர்ந்து முதுமலை அல்லது டாப்சிலிப் வனப்பகுதிக்கு காட்டுயானை கொண்டு செல்லப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் லாரியில் ஏற்றப்பட்ட காட்டுயானை சூளகிரியில் இருந்து நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முதுமலை வனப்பகுதியில் இரவோடு, இரவாக வனத்துறையினர் காட்டுயானையை லாரியில் இருந்து இறக்கினர். பின்னர் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா தலைமையிலான அதிகாரிகள் அந்த காட்டுயானையின் கழுத்தில் உள்ள ரேடியோ காலரை ஆய்வு செய்தனர். மேலும் கால்நடை மருத்துவ குழுவினர் அதன் உடல் நிலையை பரிசோதித்தனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தவுடன் காட்டுயானை வனத்துக்குள் விடப்பட்டது.

இதனிடையே ஓசூர் அருகே சூளகிரி பகுதியில் பிடிபட்ட காட்டுயானையை முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டதற்கு கூடலூர் தொரப்பள்ளி, புத்தூர்வயல் மற்றும் ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் வனப்பகுதியில் விடப்பட்ட யானையை மீண்டும் பிடித்து கும்கியாக மாற்றி முதுமலை முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து கூடலூர் எம்.எல்.ஏ.விடம் புகார் செய்தனர்.

பின்னர் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மற்றும் ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மதியம் 12 மணிக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமாரை சந்தித்து முறையிட்டனர். மேலும் ஓசூர் அருகே பிடிபட்ட காட்டுயானையை முதுமலை வனப்பகுதியில் விட்டதால் இப்பகுதி மக்களை தாக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கோவையில் பிடிபட்ட காட்டுயானை விநாயகன் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகிறது. மேலும் 2 பேரையும் கொன்றுள்ளது.

எனவே ஓசூர் அருகே பிடிபட்ட காட்டுயானையை முதுமலையில் கும்கியாக மாற்றி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். உடனே சம்பந்தப்பட்ட புலிகள் காப்பக வன அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ. ராஜ்குமார் உறுதி அளித்தார். பின்னர் ஆர்.டி.ஓ.விடம் மனுக்கள் அளித்தனர். அதில் கூடலூர், பந்தலூர் பகுதியில் காட்டு யானைகள் தாக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்து உள்ளனர். இவ்வாறு நிலைமை இருக்க பொதுமக்களை தாக்கி கொன்ற காட்டுயானையை முதுமலை வனப்பகுதியில் விடுவதால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அந்த யானையை மீண்டும் பிடித்து கும்கியாக மாற்றி முதுமலை முகாமில் பராமரிக்க வேண்டும். எனவே தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வனத்துறையினர் ரகசியமாக காட்டுயானையை இரவோடு, இரவாக கொண்டு வந்து முதுமலை வனப்பகுதியில் விட்டு உள்ளனர். எப்படி இருந்தாலும் அந்த யானை மீண்டும் ஊருக்குள் வந்து பொதுமக்களை தாக்கும். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து தரப்பினரையும் திரட்டி போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story