“விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புகிறார்களே” மகன் விஜயபிரபாகரன் கண்ணீர்சிந்தி அழுதபடி பேசியதால் பரபரப்பு
விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புகிறார்களே என ஆம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அவரது மகன் விஜயபிரபாகரன் கண்ணீர் சிந்தி அழுதபடி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர்,
தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உமராபாத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மத்திய ஒன்றிய செயலாளர் ஜான்சன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.குமார் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். சிவசங்கரன் வரவேற்றார்.
இதில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது திடீரென கண்ணீர் சிந்தி அழுதவாறு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-
எனது அப்பா விஜயகாந்தின் உடல்நிலை சீராக, சூப்பராக உள்ளது. ஆனால் அவரது உடல்நிலை குறித்து அவதூறு பரப்புகிறார்கள். இதையெல்லாம் எங்க அம்மா (பிரேமலதா விஜயகாந்த்) தாங்கிக் கொண்டு கட்சியை வழிநடத்தி, போராடி கொண்டு இருக்கிறார். நான் அழவில்லை. இதனை ஆனந்த கண்ணீராக எடுத்து கொள்ளுங்கள். யாரும் கலங்கக் கூடாது. இது மக்களுக்கான கழகம். மக்களை காப்பாற்றும் ஒரே கட்சி தே.மு.தி.க.தான்.
விஜயகாந்த் மட்டுமே உங்களை கடைசி வரை காப்பாற்றும் ஒரே தலைவர். நம் தலைவர் ஒரு தங்கம். அவரால் மட்டுமே நல்லது செய்ய முடியும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 40 ஆண்டுகள் மக்களுக்காக அவர் உழைத்து கொண்டு இருக்கிறார். வெற்றி, தோல்வி முக்கியம் அல்ல. முடிந்தளவுக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்துதான் ரூ.1½ கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story