அமராவதி சர்க்கரை ஆலையில் மறுசீரமைப்பு பணி:குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


அமராவதி சர்க்கரை ஆலையில் மறுசீரமைப்பு பணி:குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 7:39 PM IST)
t-max-icont-min-icon

அமராவதி சர்க்கரை ஆலையில் மறுசீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து தெரிவித்தார்கள். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:–

ஈஸ்வரமூர்த்தி (உழவர் உழைப்பாளர் கட்சி):–

உடுமலை அருகே அமராவதி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த சர்க்கரை ஆலை கடந்த 2 ஆண்டுகளாக இயங்கவில்லை. இந்த ஆண்டு இயங்கியது. ஆனால் பராமரிப்பு குறைபாடு, நிர்வாக குளறுபடி போன்ற காரணங்களால் சர்க்கரை ஆலை முழு அளவில் இயங்கவில்லை. இதனால் விவசாயிகள் 50 டன் அளவு கரும்பை ஆலையில் பதிவு செய்திருந்தால் 25 டன் கரும்பு மட்டுமே வெட்டி எடுக்கப்பட்டது. மீதம் உள்ள கரும்புகள் வெட்டப்படாமல் வீணாகி போனது.

ஆலையில் இந்த ஆண்டு 3 ஆயிரத்து 250 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்புகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பாதியளவு கரும்பு மட்டுமே பெறப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. சர்க்கரை ஆலையும் 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

ஜூன் மாதம் கரும்பு வெட்டப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை அதற்கான பணத்தை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. ஏற்கனவே கரும்பு முழுவதையும் வெட்டாமல் நஷ்டப்பட்டு வந்த விவசாயிகளுக்கு, வெட்டப்பட்ட கரும்புக்கான தொகையும் வழங்கப்படாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. கரும்பு டன்னுக்கு ரூ.1,500 வரை கொள்முதல் செய்யப்பட்டது.

ஆனால் தனியார் ஆலையினர் வந்தால் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பை பெறுவார்கள். எனவே அமராவதி சர்க்கரை ஆலையில் மறுசீரமைப்பு பணிகளை செய்து சீரான முறையில் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு கலெக்டர் பதில் அளித்து பேசும்போது, அமராவதி சர்க்கரை ஆலை மறுசீரமைப்பு பணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விவசாயி காளிமுத்து:–

விவசாயிகள் ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் பெறுகிறார்கள். மேலும் நகையை அடமானம் வைத்து கடன் பெறுகிறார்கள். ஆனால் நகை அடமானத்துக்கான கடன் தொகையை முழுவதும் செலுத்தினாலும் ஆவணங்களை வைத்து பெற்ற கடன் தொகையை செலுத்தாவிட்டால் புதிதாக நகைக்கடன் கொடுக்க மறுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்

இதற்கு கலெக்டர், நகைக்கடனை விவசாயிகள் முழுவதுமாக செலுத்தி விட்டால் அவர்களுக்கு நகைக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்படும் என்றார்.

பரமசிவம்(தமிழக விவசாயிகள் சங்கம்):–

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி அரசு அறிவித்தது. ஆனால் பாலில் உள்ள கொழுப்புத்தன்மை உள்ளிட்டவற்றை கணக்கிடும் போது லிட்டருக்கு ரூ.1 முதல் ரூ.2 வரை தான் கிடைக்கும். பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.4 கொடுப்பதில் 50 பைசாவை ஈவுத்தொகையாக ஆவின் எடுத்துக்கொள்கிறது. அப்படி பார்த்தால் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3.50 மட்டுமே கிடைக்கிறது. இது பால் உற்பத்தியாளர்களுக்கு போதுமானதாக இல்லை.

உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம், சர்க்கார்புதூர், வாளவாடி பகுதியில் உள்ள குளங்களை குடிமராமத்து பணியில் தூர்வார அனுமதி வழங்க வேண்டும். விவசாய மின் இணைப்பு பெற தட்கல் முறையில் விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கு மின்வாரியத்தில் போதுமான உபகரணங்கள் இல்லாதது, ஆட்கள் பற்றாக்குறை காரணமாகும். இதை சரி செய்ய வேண்டும்.

கோபால் (பி.ஏ.பி. பாசன சபை):–

பி.ஏ.பி.பாசனத்துக்கான காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழை குறைவாக இருப்பதால் அணையில் இருந்து 4–ம் மண்டலத்துக்கு பொங்கலூர், பல்லடம், காங்கேயம் பகுதிகளுக்கு தண்ணீர் உரிய காலத்துக்குள் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாய மின் இணைப்பு புதிதாக வழங்குவதற்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறு மூலமாக பாசனம் நடக்கிறது. இதனால் விவசாய மின் இணைப்பு அதிக எண்ணிக்கையில் மாவட்டத்துக்கு வழங்க அரசிடம் கலெக்டர் வலியுறுத்த வேண்டும்.

உயர்மின் கோபுரம் விவசாய நிலங்கள் வழியாக அமைக்கும் போது, அதிகப்படியான இழப்பீட்டுத்தொகையை பவர்கிரிட் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொடுத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியை தடுக்கும் விவசாயிகளை காவல்துறையினர் சென்று தரக்குறைவாக பேசுவது வேதனையளிப்பதாக உள்ளது.

இதற்கு கலெக்டர் பதில் அளித்து பேசும்போது, காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்மின் கோபுரம் அமைக்கும்போது சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை முடிந்த வரை பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு தேவையான ரசாயன உரங்கள் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கிடங்குகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது யூரியா 4 ஆயிரத்து 425 டன்னும், டி.ஏ.பி. 2 ஆயிரத்து 37 டன்னும், சூப்பர் பாஸ்பேட் 300 டன்னும், எம்.ஓ.பி. 2 ஆயிரத்து 600 டன்னும், எம்.பி.கே. காம்ப்ளக்ஸ் 7 ஆயிரத்து 203 டன்னும் இருப்பில் உள்ளது. விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் தாராபுரம் சப்–கலெக்டர் பவன்குமார், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பிரபு, வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஆனந்தகுமார், ஆர்.டி.ஓ.க்கள், துணை கலெக்டர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளின் வருகை வழக்கத்தை விட குறைவாக இருந்தது.

கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசும்போது, திருப்பூர் மாவட்டத்தில் 1,550 குளங்கள் உள்ளன. இவற்றில் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக சுமார் 900 குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 135 பணிகள் நடக்கிறது. கால்வாய் சீரமைப்பு, குளத்தை ஆழப்படுத்துதல், தூர்வாரும் பணிகள் நடக்கிறது. இதுதவிர அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள், தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் குளம், குட்டைகள் தூர்வாரப்படுகிறது. இதற்கு அவர்கள் விண்ணப்பித்தால் 2 நாளில் அனுமதி வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளை தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தூர்வார நினைத்தால் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தூர்வாரப்படும் வண்டல் மண் அந்தந்த வருவாய் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார்.

Next Story