அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் கோவில் சிதிலமடைந்து வரும் அவலம் புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை


அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் கோவில் சிதிலமடைந்து வரும் அவலம் புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Aug 2019 4:00 AM IST (Updated: 28 Aug 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே சிதிலமடைந்து வரும் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன்கோவிலை புனரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்,

கரூரை அடுத்த சோமூர் ஊராட்சிக்கு உட்பட்டது திருமுக்கூடலூர். காவிரி, அமராவதி, மணிமுத்தாறு ஆகிய 3 ஆறுகளும் அந்த இடத்தில் சங்கமிக்கும் வகையில் இருப்பதால் திருமுக்கூடலூர் என, இந்த ஊருக்கு பெயர் வந்தது. இங்கு அமராவதி ஆற்றங் கரையை ஒட்டியவாறே 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய அஞ்சநாச்சியம்மன் உடனாய அகத்தீசுவரர் எனும் வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோவில் உள்ளது. கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கமானது ஆற்று மணலில் பிடித்து வைக்கப்பட்டதாகும்.

முன்னொரு காலத்தில் அகத்தியரும், வாலியும் திருமுக்கூடலூருக்கு வந்த போது, 3 ஆறுகள் ஒன்றொடொன்று கலப்பதை பார்த்ததும் அங்கு சிவலிங்கம் அமைத்து பிரதிஷ்டை செய்யலாமே? என எண்ணினார்கள். அதற்காக நேரத்தினையும் குறித்து வைத்தனர். அப்போது காசிக்கு சென்று காசிலிங்கத்தினை எடுத்து வருவதற்காக வாலி சென்றார். அவர் வர நேரமானதாலும், பூஜைக்குரிய நேரம் வந்து விட்டதாலும் திருமுக்கூடலூர் அமராவதி ஆற்றில் மணலை எடுத்து லிங்கமாக பிடித்து வைத்து அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன் பிறகு தான் கொண்டு வந்த லிங்கத்துடன் அங்கு வந்த வாலி, அகத்தியரிடம் கோபம் கொண்டு மன்றாடினார்.

அகத்தியர்-வாலியிடையே போட்டி

அப்போது, உங்களது, வாலால் இந்த மணல் லிங்கத்தை அசைத்து எடுத்து விட்டு, நீங்கள் கொண்டு வந்த லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்யுமாறு அகத்தியர் கூறினார். இதையடுத்து வாலி தனது வாலால் மணல் லிங்கத்தை கட்டியதோடு முழு பலத்தையும் பிரயோகம் செய்து இழுத்து பார்த்தார். அப்போது, தான் கொண்டு வந்த காசிலிங்கத்துடன் வாலி சற்று தள்ளி போய் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த லிங்கம் தான் காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீராமசமுத்திரம் என்கிற அயலூரில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த கோவில் தான் அயலூர் வாலீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது என கோவிலின் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோவிலில் பூஜை செய்து வரும் குருக்கள் ராமநாதன் மற்றும் அப்பகுதி மூத்த குடிமக்களிடம் கேட்ட போது கூறியதாவது:-

அகத்தீசுவரர் கோவிலின் தல விருட்சம் வில்வமரம் ஆகும். மேலும் கோவிலின் பின் புறத்தில் சித்தர் சமாதி ஒன்று உள்ளது. பூர்வ ஜென்ம பாவங்களை நீக்குதல், செய்வினை உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட பாதிப்பை அகற்றி வாழ்க்கையில் ஏற்றம் காணவும், தொழில் விருத்தி ஏற்படவும் மனமுருகி அகத்தீசுவரரை வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. தற்போதும் வரை இந்த மணல் லிங்கத்துக்கு பாலாபிஷேகம் மட்டுமே நடந்து வருகிறது.

வெள்ளத்தினால் சேதம்

கரூர் மட்டும் அல்லாது பல்வேறு இடங் களில் இருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். எனினும் வாலி, அகத்தியருக்கிடையே நடந்த சண்டையில் அகத்தீசுவரர் கோவில் மணல் மேடாய் போகட்டும் என சாபமிட்டதாக கூறப்படுகிறது. அதனால் தான் என்னவோ? இந்த கோவில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றத்தினால் பல்வேறு காலக்கட்டங்களிலும் சேதத்திற்கு ஆளாகியுள்ளது.

கருங்கற்களால் மதில்சுவர் பெரிய அளவில் எழுப்பப்பட்டிருந்த போதிலும் அது தற்போது உடைந்து உருக்குலைந்து காட்சியளிக்கிறது. இந்த கோவிலில் சண்டிகேசுவரர், அகோர வீரபத்திரர் சன்னதியும் உள்ளது. வள்ளி-தெய்வானையுடன் கூடிய ஆறுமுக பெருமான் சன்னதி தரைமட்டமாகி தூண்கள் மட்டுமே உள்ளன. இதனால் சிலைகள் மூலவர் சன்னதிக்கு முன்பு உள்ளது. அதோடு அழகிய வேலை பாடுகளுடன் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கோவில் கோபுரமானது சிதிலமடைந்து மரங்கள் முளைத்து காட்சியளிக்கிறது.

புனரமைக்கப்படுமா?

பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய இந்த கோவில் உருக்குலைந்து கிடப்பது பக்தர்களுக்கு வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. மேலும் தொல்லியல் துறையினர் இந்த கோவிலை ஆராய்ச்சி செய்து அதன் வரலாற்றை கண்டறிந்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திட வேண்டும். சிதிலமடைந்த அகத்தீசுவரர் கோவிலை பழமை மாறாமல் புனரமைத்திட வேண்டும். பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவரை பலப்படுத்தி சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story