பொதுமக்கள் தவறவிட்ட 50 செல்போன்கள் மீட்பு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஒப்படைத்தார்


பொதுமக்கள் தவறவிட்ட 50 செல்போன்கள் மீட்பு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஒப்படைத்தார்
x
தினத்தந்தி 27 Aug 2019 11:00 PM GMT (Updated: 27 Aug 2019 9:33 PM GMT)

குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 50 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஒப்படைத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் தங்களது செல்போன்களை தவறவிடும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. செல்போன் தவறவிட்டது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. எனவே மக்கள் தவறவிடும் செல்போன்களை விரைந்து கண்டுபிடிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பெயரில் “சைபர்செல்“ உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த “சைபர்செல்“ நாகர்கோவில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் செயல்படுகிறது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் எபின் மற்றும் போலீஸ்காரர்கள் டேவிட் துரைசிங், மணிகண்ட பிரபு மற்றும் அஜித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த“சைபர்செல்“ மூலமாக பொதுமக்கள் தவறவிட்ட சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 50 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

ஒப்படைப்பு

இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பங்கேற்று செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

இதுபற்றி நாகர்கோவில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் போலீஸ் “சைபர்செல்“ உருவாக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் போலீஸ் நிலையங்களுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் மக்கள் தவறவிட்ட செல்போன்களை கண்டுபிடிக்கும் பணி “சைபர்செல்“ மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது வரை 50 செல்போன்களை கண்டுபிடித்துள்ளோம். இந்த செல்போன்கள் அனைத்தும் திருட்டு போனது அல்ல. செல்போன்களை உரியவர்களே கவனக்குறைவு காரணமாக தவறவிட்டது ஆகும்.

ஐ.எம்.இ.ஐ. நம்பர்

இவ்வாறு தவறவிடப்பட்ட செல்போன்களை 3-ம் நபர்கள் எடுத்து செல்போன் விற்பனை கடைகளில் கொடுத்துள்ளனர். நாங்கள் செல்போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ. நம்பர் மூலம் அந்த செல்போன் எங்கு உள்ளது? என்பதை கண்டுபிடித்தோம். பின்னர் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று செல்போன்களை மீட்டோம். மேலும் ஒரு சில செல்போன்களை கடைகளில் இருந்து மற்றவர்கள் வாங்கி சென்றிருந்தனர். அவர்களிடம் இருந்தும் செல்போனை மீட்டு உள்ளோம். இதில் யாரும் குற்றவாளிகள் கிடையாது. இதேபோல் பல இடங்களில் காணாமல் போன செல்போன்களை தேடி வருகிறோம். விரைவில் அவையும் கண்டுபிடிக்கப்படும்.

செல்போன் கடைகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 2-ம் தர செல்போன்களை வாங்குபவர்கள் அதை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று ஐ.எம்.இ.ஐ. நம்பரை காண்பித்து அது நல்ல செல்போனா? அல்லது திருட்டு செல்போனா? என்பதை தெளிவுபடுத்தி கொள்வது நல்லது.

போக்குவரத்து நெரிசல்

நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. அதிலும் பாதாள சாக்கடை பணி நடைபெறுவதால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தடை செய்யப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பூட்டுபோட்டு (லாக்) அபராதம் விதித்து வருகிறோம்.

ரூ.1000 அபராதம்

செப்டம்பர் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

டதி பள்ளி சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்குள்ள பஸ் நிறுத்தத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story