அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து, சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலையை ஒரு தரப்பினர் உடைத்து சேதப்படுத்தினர். இதை கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து அண்ணாசிலை அருகில் ஒன்று கூடினர். அங்கு அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்து கலவரத்தை தூண்டிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், புதுவையில் பல்வேறு இடங்களில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலைகளை உடனடியாக நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த உடன் ஒதியஞ்சாலை போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.
இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேச தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராஜா, பொதுச்செயலாளர் செந்தில்குமார், செயலாளர் கஸ்பர், பொருளாளர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் நிலையம் அருகே இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதால் காவல்துறையினர் உடந்தையாக இருந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், காவல்துறை மீதும், மாவட்ட நிர்வாகம் மீதும் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story