விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஓசூரில் விற்பனைக்கு சிலைகள் குவிப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஓசூரில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஓசூர்,
இந்துக்கள் மிகவும் சிறப்பாகவும், விமரிசையாகவும் கொண்டாடும் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா, வருகிற 2-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் பொதுப்பணித்துறை கெஸ்ட் ஹவுஸ் எதிரிலும், எம்.ஜி. ரோடு, பாகலூர் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் அமைக்கப்பட்டு 1 அடி முதல் 15 அடி வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, பாகுபலி விநாயகர், ஏழுமலையான் விநாயகர், கவுரி விநாயகர், அனுமான் விநாயகர், அய்யப்பன், முருகன் விநாயகர், குதிரை மற்றும் யானை மீது வீற்றுள்ள விநாயகர், சிம்மாசன விநாயகர் என பல வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்த சிலைகளை பொதுமக்களும், சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்து வழிபடும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும், இளைஞர்களும், சிறுவர்களும் உற்சாகத்துடன் விநாயகர் சிலைகள் முன்பு செல்பி எடுத்து கொள்கின்றனர். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட சிலைகள் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகர் சிலைகள், ரூ.50 முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story