6 வழிச் சாலைக்கு எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்


6 வழிச் சாலைக்கு எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 28 Aug 2019 4:21 AM IST (Updated: 28 Aug 2019 4:21 AM IST)
t-max-icont-min-icon

6 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3 ஆயிரத்து 200 கோடி செலவில் 136 கிலோமீட்டர் தூரத்துக்கு 6 வழிச் சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சாலை கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம், தும்பாக்கம், பாலவாக்கம், சென்னங்காரணை, போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது. சாலை அமைக்க நிலம் அளவிடும் பணிகள் நடந்து வருகின்றன.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணையில் சாலை அமைத்தால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 230 ஏக்கர் நிலபரப்பில் விளை நிலங்கள், அரசு பள்ளி, 175-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அப்படி நிகழ்ந்தால் 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பாதிப்பு அடைவர்.

இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமம் வழியாக 6 வழிச் சாலை அமைக்க கூடாது என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறப்பு தாசில்தார்கள் குமார், கார்குழலி, ராஜேஸ்வரி , ப்ரித்தி, ஓய்வுபெற்ற தாசில்தார் லியோ தலைமையில் அதிகாரிகள் குழு நேற்று சென்னங்காரணை சென்றனர். அவர்கள் நிலத்தை அளவீடு செய்தனர். இதை கண்டித்து, மாற்று வழியில் சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள், விவசாயிகள் சுமார் 500 பேர் அங்கு திரண்டு் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிலர் தங்களது ரேஷன்கார்டுகளை வீசி எதிர்ப்பை தெரிவித்தனர். இது பற்றி தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர்கள் மதியரசன், அனுராதா ஆகியோரின் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்தனர். அதிகாரிகள் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Next Story