திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை தூய்மைப்படுத்த தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள்


திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை தூய்மைப்படுத்த தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Aug 2019 10:45 PM GMT (Updated: 28 Aug 2019 3:15 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை தூய்மைப்படுத்த தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு தாலுகா பகுதிகளில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். பல்லடம் தாலுகாவில் காட்டூர் பகுதியில் ரூ.15 லட்சத்திலும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் கண்டியன் கோவில் பகுதியில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், நாச்சிப்பாளையத்தில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.39 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த பணிகளை விரைவாக முடிக்கவும், விவசாயிகள் நல்ல முறையில் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

பின்னர் ஆய்வு குறித்து கலெக்டர் கூறும்போது, திருப்பூர் மாவட்டத்தில் 134 பணிகள் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் ரூ.15 கோடியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி துறை சார்பில் கிராமங்கள் தோறும் உள்ள ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊருணிகள் போன்ற நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்தவும், மழைநீரை சேமிக்கும் வகையிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 824 குளங்கள் மற்றும் ஏரிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.24 கோடியே 72 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு வருகிறது. நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணியில் தனியார் மற்றும் பொதுமக்கள் 100 சதவீத பங்களிப்புடன் வெங்கமேடு, காவிலிப்பாளையம், கரைப்புதூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி வருகிறார்கள்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூய்மைப்படுத்தி நீர் ஆதாரத்தை மேம்படுத்தவும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வர வேண்டும். இந்த பணியில் ஈடுபடும் பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.

இந்த ஆய்வில் ஆழியார் வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் புவனேஷ்வரி, உதவி பொறியாளர் சக்திகுமார், இளம்பொறியாளர் சின்னராஜ், திருப்பூர் தெற்கு தாசில்தார் மகேஷ்வரன், அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story