சாதி, மத மோதல்களை தூண்டுவோரை கைது செய்ய - சமூக வலைத்தள பதிவுகளை தீவிரமாக கண்காணிக்கும் போலீசார்


சாதி, மத மோதல்களை தூண்டுவோரை கைது செய்ய - சமூக வலைத்தள பதிவுகளை தீவிரமாக கண்காணிக்கும் போலீசார்
x
தினத்தந்தி 29 Aug 2019 4:00 AM IST (Updated: 28 Aug 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளங்களில் சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் தகவல்களை பரப்பும் நபர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தேனி,

தமிழகத்தில் சாதி, மத மோதல்கள் ஏற்படாமல் தடுக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும் தமிழக போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்திலும் சாதி, மத மோதல்களை தூண்டும் வகையில் செயல்படும் நபர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் சாதி, மத மோதல் களை தூண்டும் வகையில் புகைப்படங்கள், பதிவுகள் போடுவதால் அது வைரலாக பரவி பல்வேறு இடங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதனால், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் சமூக வலைத்தள கண்காணிப்பு பிரிவு போலீசார், சமூக வலைத்தளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டும் வகையில் பதிவு செய்யும் நபர்களை கண்காணித்து வருகின்றனர்.

இதுதொடர்பான விழிப்புணர்வு மீம்ஸ்களை உருவாக்கியும், அவற்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘சிலர் அறியாமையாலோ, பிற சமுதாயத்தினர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியாலோ பிற மத, சமுதாயம் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவிக்கும் போது, அது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வழிவகுக்கிறது. சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற பதிவுகள் போடுவது குற்றமாகும்.

எனவே, தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் பேஸ்புக், டுவிட்டர், யுடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற அவதூறு கருத்துக்களை பரப்பினாலோ, பிற மத, சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்கள், கேலிச் சித்திரங்கள் பதிவேற்றம் செய்தாலோ அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள். இதற்காக சமூக வலைத்தள பதிவுகளை கண்காணிப்பதற்காகவே தனியாக போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்’ என்றார்.

Next Story