தேனி அரசு சட்டக்கல்லூரி இன்று தொடக்கம், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்


தேனி அரசு சட்டக்கல்லூரி இன்று தொடக்கம், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 29 Aug 2019 4:30 AM IST (Updated: 29 Aug 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் அரசு சட்டக்கல்லூரியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைக்கிறார்.

தேனி,

தேனி, சேலம், நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் புதிதாக அரசு சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி, தேனி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கு தேனி அருகே வீரபாண்டியில் இருந்து தப்புக்குண்டு செல்லும் சாலையோரம் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு விரைவில் கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்க உள்ளது.

அதேநேரத்தில், இந்த சட்டக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் இருந்தே வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டது. உப்பார்பட்டி பிரிவு அருகில் உள்ள சந்திர குப்தா மவுரியா இன்டர்நேஷனல் பள்ளியில் தற்காலிகமாக சட்டக்கல்லூரி செயல்பட உள்ளது.

அதன்படி, தேனி அரசு சட்டக்கல்லூரி தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கி பேசுகிறார். கலெக்டர் பல்லவி பல்தேவ் வரவேற்று பேசுகிறார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு அரசு சட்டக்கல்லூரியை தொடங்கி வைத்து பேசுகிறார். விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை தேனி அரசு சட்டக்கல்லூரி தனி அலுவலர் டி.ஆர்.அருண் மற்றும் அதிகாரிகள் செய்துள்ளனர்.
1 More update

Next Story