கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில், இந்து முன்னணியினர் காத்திருக்கும் போராட்டம்


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில், இந்து முன்னணியினர் காத்திருக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2019 10:30 PM GMT (Updated: 28 Aug 2019 10:26 PM GMT)

கோவில் சொத்துகளை மீட்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் நகர பொதுச்செயலாளர் சுதாகரன் தலைமையில் நேற்று காலையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு இருப்பவர்கள் கடந்த 28-2-2018-க்குள் வாடகை நிலுவைத்தொகையை செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் அங்கு பெரும்பாலானவர்கள் வாடகை நிலுவைத்தொகையை செலுத்தாமல் உள்ளனர். எனவே கோவில் சொத்துகளை மீட்டு, மறு ஏலம் விட வேண்டும்.

இதேபோன்று மூப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கோவில் சொத்துகளை மீட்க வேண்டும். கோவிலில் உள்ள சிலைகள் மற்றும் நன்கொடையாளர்கள் வழங்கிய பொருட்கள் ஆகியவற்றின் தரம் மற்றும் இருப்பை சரி பார்க்க வேண்டும். கோவிலில் ஊழியராக பணியாற்றுகிறவரின் மகனும், விதிகளுக்கு மாறாக அதே கோவிலில் தற்காலிக பணியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுவை பெற்று கொண்ட உதவி கலெக்டர் விஜயா, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story