விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு


விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
x
தினத்தந்தி 29 Aug 2019 4:30 AM IST (Updated: 29 Aug 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்பையில் மும்முரம் அடைந்து உள்ளது. கிங்சர்க்கிள் ஜி.எஸ்.பி. மண்டல் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடியே 65 லட்சம் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

மும்பை,

மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகவும், விமரிசையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 2-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 11 நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அப்போது வீதிகளிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பொது இடங்களில் நிறுவி வழிபாடு செய்வதற்காக விதவிதமான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. விழா ஏற்பாடுகள் மும்முரம் அடைந்து உள்ளன. இதனால் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகம் இப்போதே தொடங்கி விட்டது.

குறிப்பாக மும்பை லால்பாக்கில் நிறுவப்படும் லால்பாக் ராஜா விநாயகர் சிலை பிரசித்தி பெற்றதாகும். இந்த விநாயகரை வழிபட அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் படையெடுப்பார்கள். இதேபோல் மும்பை கிங்சர்க்கிளில் ஜி.எஸ்.பி. விநாயகர் மண்டல் சார்பில் நிறுவப்படும் விநாயகர் சிலை பணக்கார விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

சுமார் 90 கிலோ தங்கம், வெள்ளி, வைரம் நகைகளில் ஜொலிக்கும் இந்த விநாயகரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

எனவே கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு 266 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விநாயகர் சிலை, அதற்கு அணிவிக்கப்படும் நகைகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவ்வளவு பெருந்தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதேபோல மேலும் பல விநாயகர் சிலைகளுக்கு, அதனை நிறுவும் அமைப்புகள் சார்பில் காப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.

Next Story