எனக்கு வழங்க வேண்டிய பொறுப்பை மக்கள் தீர்மானிப்பார்கள் - ஆதித்ய தாக்கரே கூறுகிறார்
எனக்கு வழங்க வேண்டிய பொறுப்பை மக்கள் தீர்மானிப்பார்கள் என ஆதித்ய தாக்கரே கூறினார்.
நாக்பூர்,
மராட்டிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே ஒருபோதும் தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. அரசு பதவிக்கும் வந்தது கிடையாது.
இவரது மகன் உத்தவ் தாக்கரே தற்போது சிவசேனா கட்சியின் தலைவராக உள்ளார். இவரும் தேர்தலில் போட்டியிடவில்லை. 25 வயதான அவரது மகன் ஆதித்ய தாக்கரே அக்கட்சியின் இளைஞரணியான யுவசேனாவின் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல்முறையாக ஆதித்ய தாக்கரே தேர்தலில் குதிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் மும்பை ஒர்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு அச்சாரம் போடும் விதமாக ஆதித்ய தாக்கரே தற்போது ஜன் ஆசிர்வாத் யாத்ரா என்ற பெயரில் மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் நாக்பூருக்கு வந்த அவரிடம் நிருபர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு ஆதித்ய தாக்கரே பதில் அளித்து கூறியதாவது:-
நான் தேர்தலில் போட்டியிடுவேனா?, இல்லையா?, எந்த தொகுதியில் போட்டியிடுவேன்? உள்ளிட்ட கேள்வி தாள்களை நான் தற்போது பூர்த்தி செய்ய விரும்பவில்லை.
இறுதியாக அரசியல்வாதிகளை தீர்மானிப்பது பொதுமக்கள் மட்டும் தான். காற்று மாசு, வேலையின்மை, வறட்சி மற்றும் பயிர் கடன் ஆகியவற்றிலிருந்து நமது மாநிலத்தை விடுவிக்கும் வகையில் நற்பணிகளை செய்ய நான் இப்போது மக்களின் ஆசீர்வாதங்களை நாடுகிறேன். மக்கள் எனக்கு எந்த பொறுப்பை ஒதுக்க விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் தான் எஜமானர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story