மார்த்தாண்டத்தில் மேற்கு வங்காள வாலிபர் சிக்கினார் அமிர்தானந்தமயி நிறுவனங்களின் வரைபடம் வைத்திருந்ததால் பரபரப்பு


மார்த்தாண்டத்தில் மேற்கு வங்காள வாலிபர் சிக்கினார் அமிர்தானந்தமயி நிறுவனங்களின் வரைபடம் வைத்திருந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Aug 2019 3:30 AM IST (Updated: 29 Aug 2019 8:21 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் மேற்கு வங்காள வாலிபர் சிக்கினார். அவர், அமிர்தானந்தமயி நிறுவனங்களின் வரைபடம் வைத்திருந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குழித்துறை,

மார்த்தாண்டம் விரிகோடு பகுதியில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இந்த பகுதியில் நேற்று காலை வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். அங்குள்ள மக்கள், அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதற்கு அவர் பேசாமல் கைகளால் சைகை மட்டும் செய்தார்.

இதையடுத்து அந்த நபர் இந்தி பேசுபவராக இருக்கலாம் என நினைத்து விடுமுறைக்கு வந்திருந்த ராணுவ வீரர் ஒருவரை பொதுமக்கள் அழைத்தனர். அந்த வாலிபரிடம் ராணுவ வீரர் இந்தியில் பேசினார். அந்த நபர் அதற்கும் பதிலளிக்காமல் ஊமை போல் இருந்தார்.

இதைதொடர்ந்து அந்த வாலிபர் பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். மேலும் சந்தேகமடைந்த பொதுமக்கள் வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் அவருடைய பாஸ்போர்ட் இருந்தது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி ஆஸ்பத்திரியின் முகவரி மற்றும் வரைபடம், நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் அமிர்தா என்ஜினீயரிங் கல்லூரி பற்றிய முகவரி மற்றும் வரைபடம் இருந்தது.

அவரது பாஸ்போர்ட்டை பார்த்தபோது அவர் மேற்கு வங்காள மாநிலம் பர்ட்வான் மாவட்டத்தை சேர்ந்த சர்மான் அலியின் மகன் நவ்சாத் அலி (வயது 27) என்பது தெரியவந்தது.

போலீசார் தீவிர விசாரணை

இதனையடுத்து பொதுமக்கள் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். போலீசார் வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதற்கும் அவர் பதிலளிக்காமல் ஊமை போல் இருந்தார்.

அந்த வாலிபர் ஊமையா? வாய் பேசக் கூடியவரா என்பதை கண்டறியும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் அமிர்தானந்தமயி கல்லூரி, ஆஸ்பத்திரி போன்ற நிறுவனங்களின் வரைபடங்களுடன் மேற்கு வங்காள வாலிபர் சிக்கியிருக்கும் சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story