இரவு உணவை புறக்கணித்து கல்லூரி விடுதி மாணவர்கள் தர்ணா


இரவு உணவை புறக்கணித்து கல்லூரி விடுதி மாணவர்கள் தர்ணா
x
தினத்தந்தி 29 Aug 2019 11:00 PM GMT (Updated: 29 Aug 2019 8:05 PM GMT)

புதுக்கோட்டையில் இரவு உணவை புறக்கணித்து கல்லூரி விடுதி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் மன்னர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.

இக்கல்லூரிக்கு வெகு தொலைவில் இருந்து வரும் மாணவர்கள் தங்கி பயிலும் வகையில், கல்லூரியின் அருகே அம்பேத்கர் விடுதி, ஆதிதிராவிடர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி உள்பட 4 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந் நிலையில், புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரில் உள்ள மன்னர் கல்லூரி அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் உணவு சரியில்லை. விடுதியை சுற்றி சுகாதாரம் இல்லை. அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை எனக்கூறி நேற்று முன்தினம் இரவு உணவை புறக்கணித்து 100-க்கும் மேற்பட்ட அவ்விடுதி மாணவர்கள் விடுதி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி சம்பவ இடத்துக்கு வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி விடுதியை ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story