நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - திரளான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை,
நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவுக்கு தனி வரலாறு உண்டு. திருவளரும் கீரனூரில் அந்தணர் குலத்தில் சூரியன் அருளால் பிறந்தவர் கருவூர் சித்தர். அவர் கலைகள் முழுவதும் நன்கு கற்றவர். கருவூர் சித்தர் நல்வரங்கள் பெறுவதற்காக சிவபெருமான் எழுந்தருளிய தலமான நெல்லைக்கு வந்தார்.
நெல்லையப்பரை தரிசிக்க வந்த வேளையில் நெல்லையப்பரிடம் இருந்து பதில் ஒன்றும் கிடைக்காததால் வெகுண்டு கோபம் அடைந்த அவர், ஈசன் இங்கு இல்லை என சாபமிட்டுவிட்டு மானூரை சென்றடைந்தார்.
இதையடுத்து சாப விமோசனம் பெறுவதற்காக நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் ஏறி ஆவணி மூல திருநாளில் அதிகாலை மானூருக்கு சென்று சித்தருக்கு காட்சி கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்று சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆவணி மூலத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
திருவிழாவுக்கான கொடியேற்றம் நெல்லையப்பர் கோவில் சுவாமி சன்னதியில் நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் நாராயணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4-ம் நாள் திருநாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுரு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடக்கிறது.
வருகிற 6-ந் தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் மானூர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அவர் 4 ரத வீதிகளிலும் உலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார்.
10-ம் நாள் திருநாளான 7-ந் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் நெல்லையப்பர் கோவிலில் இருந்து சந்திரசேகர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகளுடன் பல்லக்கிலும், சப்பரத்திலும் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளையும் சுற்றி, ராமையன்பட்டி, ரஸ்தா வழியாக மானூர் அப்பலவாண சுவாமி கோவிலை 8-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறார்.அங்கு நெல்லையப்பர், கருவூர் சித்தருக்கு காட்சி அளித்து சாபவிமோசனத்தை நிவர்த்தி செய்கிறார். பின்னர் காலை 7 மணி முதல் 8 மணி வரை சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து அங்கு இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு நெல்லையப்பர் கோவில் வந்தடைகிறார்கள்.இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story