லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில், பாலித்தீன் பைகளால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு


லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில், பாலித்தீன் பைகளால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 29 Aug 2019 10:45 PM GMT (Updated: 29 Aug 2019 8:38 PM GMT)

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் பாலித்தீன் பைகளால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கூடலூர்,

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட லோயர்கேம்பில் இருந்து கேரள மாநிலம் குமுளி வரை 6 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை ஆகும். இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைப்பாதையில் மான்கள், குரங்குகள், காட்டுப்பன்றிகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக மலைப்பாதையோரத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன.

கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர். அவ்வாறு சென்று வரும் சுற்றுலா பயணிகள், மலைப்பாதையோரத்தில் வாகனங்களை நிறுத்தி இயற்கை காட்சிகளை ரசித்து செல்கின்றனர்.

அப்போது, அவர்கள் தாங்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீசி சென்று விடுகின்றனர். இதனால் குமுளி செல்லும் மலைப்பாதையில் பாலித்தீன் பைகள் குவிந்து கிடக்கின்றன.

இந்த பைகளில் உள்ள தின்பண்டங்களை வன விலங்குகள் உண்ணுவதால் அவை பாதிப்படைகின்றன. அதிலும், மலைப்பாதையில் கிடக்கிற பாலித்தீன் பைகளை குரங்குகள் தின்று வருகின்றன. இதனால் அவை உயிரிழக்க நேரிடுகிறது. எனவே லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட் களை வீசி செல்லும் சுற்றுலா பயணிகள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story