சேலத்தில், வழிப்பறியில் ஈடுபட்ட; 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


சேலத்தில், வழிப்பறியில் ஈடுபட்ட; 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 30 Aug 2019 4:00 AM IST (Updated: 30 Aug 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம், 

சேலம் சின்னபுதூர் மணியகார தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 34). இவர், கடந்த மார்ச் மாதம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அழகாபுரத்தை சேர்ந்த தனபால் என்பவரை முன்விரோத தகராறில் கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றார். இது தொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அவர், கடந்த 16-ந் தேதி சின்னபுதூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மேலும், பெரமனூர் மெயின் ரோட்டில் நடந்து சென்ற ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றார்.

இதேபோல், உடையாப்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்த சுகன்ஹாசன் (23) என்பவர், கடந்த ஆண்டு கன்னங்குறிச்சியை சேர்ந்த ஒரு பெண்ணை மிரட்டி தங்க நகைகள் மற்றும் பணத்தை பறித்தார். பின்னர் அவர், அங்கிருந்த மற்றொரு நபரிடமும் பணத்தை மிரட்டி வழிப்பறி செய்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகன்ஹாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்ந்து வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படு கிறது.

இதனால் ராமு, சுகன்ஹாசன் ஆகிய 2 பேரும் ஒவ்வொரு முறையும் ஜாமீனில் வெளியே வந்து தொடர்ந்து வழிப்பறி உள்பட குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அஸ்தம்பட்டி மற்றும் டவுன் போலீசார் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து ராமு, சுகன்ஹாசன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் செந்தில்குமார் நேற்று உத்தரவிட்டார்.

Next Story