குன்னத்தில், நேருக்கு நேர் மோதல்: டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் 2 லாரிகள் எரிந்து நாசம்


குன்னத்தில், நேருக்கு நேர் மோதல்: டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் 2 லாரிகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 31 Aug 2019 4:00 AM IST (Updated: 31 Aug 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னத்தில் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. இதில் 2 லாரிகளும் எரிந்து நாசமாயின.

குன்னம், 

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள ஏரி கரையில் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வளைந்து, வளைந்து செல்லும் வகையில் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த லாரியை திருமலைப்பாடியை சேர்ந்த ராஜேஷ் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார்.

எதிரில் அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி 10 டன் சிமெண்டு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை சீனிவாசன் (35) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது சாலையில் இருந்த ஒரு வளைவில் எதிர்பாராத விதமாக 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் லாரியில் இருந்த டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் லாரிகள் எரியத்தொடங்கின. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதில் சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரி முழுமையாக தீப்பிடித்து எரிந்தது. மற்றொரு லாரியின் முன்பகுதி சேதம் அடைந்து எரிந்தது. இதில் மொத்த சேத மதிப்பு ரூ.60 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் சீனிவாசனுக்கு வலது கால் உடைந்தது. ராஜேஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதையடுத்து டிரைவர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில், குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story