விருதம்பட்டு, டி.கே.புரம் பகுதியில் மணல் கடத்தலை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
விருதம்பட்டு, டி.கே.புரம் பகுதியில் மணல் கடத்தலை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர்.
காட்பாடி,
விருதம்பட்டு அருகே உள்ள டி.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரகுமார் (வயது 19). இவர், நேற்று முன்தினம் அந்த பகுதியில் மாட்டு வண்டியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் நரேந்திரகுமாரின் உறவினர்கள் நேற்று காலை மாரியம்மன் கோவில் அருகே திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக லத்தேரியில் இருந்து அடுக்கம்பாறை நோக்கி சென்ற அரசு பஸ்சை அவர்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி நடந்து சென்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதி பாலாற்றில் மணல் கடத்தப்படுகிறது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிப்ளமோ படித்த நரேந்திரகுமார் என்ற வாலிபரை அவர்கள் கூலி வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மாட்டுவண்டியில் சிக்கி அவர் உயிரிழந்து விட்டார். எங்கள் பகுதியில் மணல் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்’ என்றனர்.
மணல் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் சாலையில் மாட்டு வண்டிகள் செல்லாதவாறு அவர்கள் சாலையின் குறுக்கே கற்களை நட்டுள்ளனர். மறியல் குறித்து தகவல் அறிந்ததும் விருதம்பட்டு (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story