கர்நாடகத்தில் 17 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்: 12 இடங்களை கைப்பற்ற பா.ஜனதா இலக்கு


கர்நாடகத்தில் 17 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்: 12 இடங்களை கைப்பற்ற பா.ஜனதா இலக்கு
x
தினத்தந்தி 31 Aug 2019 10:45 PM GMT (Updated: 31 Aug 2019 6:59 PM GMT)

கர்நாடகத்தில் 17 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 12 தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், கூட்டணி அரசு கவிழ்ந்தது. இந்த நிலையில், ராஜினாமா செய்த 15 பேர் உள்பட 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இதனால் அந்த 17 தொகுதிகளும் காலியாக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த 17 தொகுதிகளுக்கும் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த 17 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) இறுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. ஏனெனில் அக்டோபர் மாதம் இறுதியில் மராட்டியம், அரியானா உள்பட 3 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அந்த 3 மாநிலங்களுக்கு நடைபெறும் சட்டசபை தேர்தலுடன், கர்நாடகத்தில் காலியாக உள்ள 17 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

இதையடுத்து, இடைத்தேர்தல் நடைபெறும் 17 தொகுதிகளில், 12 இடங்களில் வெற்றிபெற பா.ஜனதா கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது பா.ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பலம் 105 ஆக இருக்கிறது. மேலும் சுயேச்சை எம்.எல்.ஏ.வான நாகேஷ் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் 113 எம்.எல்.ஏ.க்களின் பலம் இருந்தால் தான் அரசை வழிநடத்த முடியும். தற்போது பா.ஜனதாவின் பலம் 105 (சுயேச்சையை தவிர்த்து) ஆக இருப்பதால், இடைத்தேர்தல் நடைபெறும் 17 தொகுதிகளில் குறைந்தது 8 இடங்களில் பா.ஜனதா கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும். ஆனால் தற்போது மந்திரி பதவி கிடைக்காமல் பல எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் இருக்கிறது. இதனால் 8 தொகுதிகளுக்கு பதிலாக 12 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெறுவதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா இலக்கு நிர்ணயித்துள்ளார். அவ்வாறு 12 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பா.ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பலம் 117 ஆக உயரும். இதன் மூலம் ஆட்சியை எந்த விதமான பிரச்சினையும் இன்றி நடத்தலாம் என்று எடியூரப்பா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறும் 17 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தேர்வில் தனிக்கவனம் செலுத்தவும், வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கவும் எடியூரப்பா முடிவு செய்துள்ளார். குறிப்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 5 பேருக்கு, அவர்களது தொகுதிகளில் இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்காமல், அங்கு வலுவான வேட்பாளர்களை நிறுத்தவும் பா.ஜனதா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Next Story