தஞ்சையில் ரூ.60 லட்சத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி மும்முரம்


தஞ்சையில் ரூ.60 லட்சத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 1 Sept 2019 4:15 AM IST (Updated: 1 Sept 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ரூ.60 லட்சத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு ரூ.903 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சிவகங்கை பூங்கா புனரமைப்பு, குளங்கள் பராமரிப்பு, பூங்காக்கள் அமைத்தல், பெத்தண்ணன் திறந்தவெளி கலையரங்கம் சீரமைத்தல், குடிநீர் வசதி மேம்படுத்துதல், காமராஜர் மார்க்கெட் சீரமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் தொடங்கி மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக தஞ்சையில் உள்ள பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ் நிலையமும் புதுப்பிக்கப்படுகிறது. பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாரியம்மன்கோவில், அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், ஒரத்தநாடு, குருங்குளம், நாஞ்சிக்கோட்டை, அரியலூர், வல்லம், செங்கிப்பட்டி, மருத்துவக்கல்லூரி ஆகிய பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இடிக்கப்படும் கட்டிடங்கள்

திருவையாறு பஸ் நிலையத்தில் இருந்து திருவையாறு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, திருக்கருக்காவூர், திட்டை ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 2 பஸ் நிலையங்களையும் இடித்துவிட்டு சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.

திருவையாறு பஸ் நிலையத்தில் ரூ.13 கோடியே 85 லட்சம் மதிப்பில் 48 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. 58 கார்களும், 437 இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு இடவசதி செய்யப்பட உள்ளது. பழைய பஸ் நிலையம் ரூ.14 கோடியே 88 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக அங்குள்ள கட்டிடங்கள் எல்லாம் இடிக்கப்பட இருக்கிறது.

தார்ச்சாலை அமைக்கும் பணி

இதனால் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர். அதன்படி தஞ்சை கொடிமரத்துமூலைக்கும், கரந்தை அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கும் இடையே காசிபிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வாண்டையார் மைதானம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த மைதானத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி, பயணிகள் நிற்பதற்கான இடவசதி, கழிப்பறை வசதி ஆகியவை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 3 உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரிகள் கருத்து

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சுமார் ரூ.60 லட்சத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ் நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். இங்கிருந்து பஸ்கள் செல்ல தொடங்கியவுடன் 2 பஸ் நிலையங்களில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கப்படும் என்றனர்.

Next Story