பெலகாவி சுவர்ணசவுதாவில், சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை நடத்த முடிவு 10 நாட்கள் நடத்துவதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா திட்டம்


பெலகாவி சுவர்ணசவுதாவில், சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை நடத்த முடிவு 10 நாட்கள் நடத்துவதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா திட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2019 4:45 AM IST (Updated: 1 Sept 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி சுவர்ண சவுதாவில் அக்டோபர் மாதம் 2-வது வாரம் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை நடத்தவும், இந்த கூட்டத் தொடரை 10 நாட்கள் நடத்துவதற்கும் முதல்- மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத்தில் கடந்த மாதம்(ஆகஸ்டு) பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் 16 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். இதனால் சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும், மழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை அடுத்த மாதம்(அக்டோபர்) 2-வது வாரத்தில் கூட்டுவதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இந்த கூட்டத்தொடரை 10 நாட்கள் நடத்துவதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார். இதுதொடர்பாக அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், பெலகாவி சுவர்ணசவுதாவில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு விதான சவுதாவில் வழக்கமாக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். வடகர்நாடக மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் குளிர்கால கூட்டத்தொடர் மட்டும் பெலகாவியில் உள்ள சுவர்ணசவுதாவில் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் பெலகாவி சுவர்ணசவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா தீர்மானித்துள்ளார்.

இதனால் பட்ஜெட் தயாரிப்பதற்கான பணிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்தே எடியூரப்பா ஈடுபட இருக்கிறார். இதன் காரணமாக டிசம்பர் மாதம் பெலகாவி சுவர்ணசவுதாவில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு பதிலாக 2 மாதங்களுக்கு முன்பாக அக்டோபர் மாதம் 2-வது வாரத்திலேயே குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெலகாவியில் அக்டோபர் மாதம் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக மந்திரிசபை கூட்டத்தை கூட்டி முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளார். மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு கூடிய விரைவில் பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

இதற்கிடையில், பெலகாவியில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரின் போது, கர்நாடகத்தின் 2-வது தலைநகராக பெலகாவியை அறிவிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story