பெரம்பலூரில் டிராக்டர் தருவதாக கூறி மோசடி: ஏஜென்சி மேலாளர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் விவசாயி புகார்


பெரம்பலூரில் டிராக்டர் தருவதாக கூறி மோசடி: ஏஜென்சி மேலாளர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் விவசாயி புகார்
x
தினத்தந்தி 1 Sept 2019 3:45 AM IST (Updated: 1 Sept 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் டிராக்டர் தருவதாக கூறி பண மோசடி செய்த ஏஜென்சி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகேயுள்ள புதுஆத்தூர் கிராமம் காட்டுக்கொட்டகையை சேர்ந்த விவசாயியான தங்கவேல் நேற்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அரசின் வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் டிராக்டர் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்திருந்தேன். அதன்படி, 2 ஆண்டுகள் நிறைவடைந்து டிராக்டர் வாங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் 15 நாட்களுக்குள் டிராக்டர் வாங்கி பதிவு செய்த விவரத்தை 27.8.2019-ந் தேதிக்குள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 20-ந் தேதி பெரம்பலூரில் உள்ள ஒரு டிராக்டர் ஏஜென்சியில் ஒரு வாரத்துக்குள் டிராக்டர் வழங்க வேண்டும் எனக் கூறி, முன் பணமாக ரூ.50 ஆயிரம் செலுத்தி எனது பெயரை பதிவு செய்தேன். மீதமுள்ள தொகை டிராக்டர் வழங்கும் போது செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.

டிராக்டர் ஏஜென்சி மேலாளர்

பின்னர் பலமுறை டிராக்டர் ஏஜென்சியிடம் சென்று கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 29-ந் தேதி வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை அணுகியபோது டிராக்டர் வாங்க கால அவகாசம் முடிந்து விட்டதாகவும் அதனால் டிராக்டர் மானியத் தொகை ரத்து செய்யப்பட்டதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் டிராக்டர் வாங்க அரசு வழங்கிய 50 சதவீத மானியத் தொகை ரூ.3.50 லட்சத்தை இழந்து விட்டேன். இதுதொடர்பாக டிராக்டர் ஏஜென்சி மேலாளரை அணுகி முறையிட்டு, முன் தொகையாக அளித்திருந்த ரூ.50 ஆயிரத்தை கேட்டதற்கு தர மறுத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார்.

குறிப்பிட்ட காலத்துக்குள் டிராக்டர் வழங்காததால் அரசின் மானியத் தொகையை இழந்ததோடு மட்டுமின்றி, முன் தொகையாக வழங்கிய ரூ.50 ஆயிரத்தையும் தர மறுக்கின்றனர். எனவே டிராக்டர் ஏஜென்சிஸ் மேலாளர் மீது நடவடிக்கை எடுத்து, எனது முன் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.


Next Story