திருப்பத்தூரில் கலெக்டர் அலுவலகம் உள்பட அனைத்து அலுவலகங்களும் அமைக்கப்படும்: அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
திருப்பத்தூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அனைத்து அலுவலகங்களும் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டத்தை பிரித்து புதிதாக திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து புதிதாக திருப்பத்தூர் மாவட்டம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட செய்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை, கம்பன் கழகம், ஜெயின் சங்கம், உதவும் உள்ளங்கள், வழக்கறிஞர்கள் சங்கம், நகை அடகு வியாபாரிகள் சங்கம், அரசு ஊழியர்கள் சங்கம், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலச்சங்கம், நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்கம், பாத்திரக்கடை, பஸ் உரிமையாளர்கள் கட்டிட பொறியாளர்கள், மெஷினரி, ஏலகிரி ஓட்டல் உரிமையாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்பட 38 சங்கங்கள் சேர்ந்து கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பட்ட பொதுமக்கள் சார்பாக பாராட்டு விழா திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் அரிமா சங்க ஆளுனர் பேராசிரியர் ரத்தின நடராஜன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க முன்னாள் துணை நிலை ஆளுனர் கே.பரந்தாமன் வரவேற்றார். தூய நெஞ்சக் கல்லூரி முதல்வர் மரிய ஆரோக்கியம், காமராஜர் அறக்கட்டளை தலைவர் பி.கணேஷ்மல், ஜெயின் சங்க தலைவர் மாங்கிலால், கம்பன் கழகத் தலைவர் எஸ்.எஸ்.மணியன், இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் பிரபாகரன், ரோட்டரி சங்க தலைவர் வெங்கோபன், மனிதநேய தலைவர் கே.சி.எழிலரசன், எஸ்.ஆர்.டி.பி.எஸ். தொண்டு நிறுவன தமிழரசி, தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர் (டி.சி.ஓ.ஏ) சங்க மாவட்ட செயலாளர் ஜி.கே.சுரேஷ் உள்பட பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:-
2011-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூரை தனி மாவட்டமாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். சட்டமன்றத்திலும் பலமுறை இதே கோரிக்கையை வைத்துள்ளோம்.
இதனை ஏற்று ஜெயலலிதா அப்போது தலைமைச் செயலாளரை அழைத்து வேலூர் மாவட்டத்தை பிரிப்பது குறித்து கேட்டபோது வேலூர் மாவட்டம் மிகப்பெரிய மாவட்டம், 13 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதுபோன்று வேறு எந்த மாவட்டத்திலும் கிடையாது. இதனை பிரிப்பது சிரமமாக உள்ளது. நிதிநிலை காரணம் எனக்கூறினார்கள்.
மீண்டும் 2016-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் திருப்பத்தூர் தனி மாவட்டமாக வேண்டும் தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். உடனடியாக ஜெயலலிதா மாவட்டத்தை பிரிக்க முடிவெடுத்தார். அதற்குள் அவருக்கு உடல்நிலை சரியில்லை மற்றும் தேர்தல் காரணத்தால் தள்ளிப்போனது. பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிக்கப்படும் போது வேலூர் மாவட்டம் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் அறிவித்திருக்க வேண்டும்.
ஆனால் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால் அறிவிக்க முடிய வில்லை. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னை அழைத்து வேலூர் மாவட்டத்தை பிரிக்க உள்ளதாக கூறினார். உடனடியாக வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து திருப்பத்தூர் தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டமாகவும், ராணிப்பேட்டை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டமாகவும் பிரிக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.
அதை ஏற்று, இதனை சுதந்திர தின விழாவில் அறிவிக்கிறேன் என்றார். நான் இந்த மாவட்ட அமைச்சராக இருந்த போதும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 4 தொகுதிகளும் வேலூர் மாவட்டத்திற்கு 5 தொகுதியும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 4 தொகுதி என எனக்கு ஒரு தொகுதியை குறைத்துக் கொண்டு மக்கள் நலனே முக்கியம் என்று பிரிக்க கூறினேன்.
திருப்பத்தூர் மிக பழமையான ஊர். 229 ஆண்டுகளுக்கு முன்பே சேலம், சித்தூர் பகுதிகளுக்கு தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது என்று பலர் பேசினார்கள். இந்த பெருமை வாய்ந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் திருப்பத்தூரில் புதிதாக அமைக்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னோடி மாவட்டமாக வளர்ச்சி அடையும் என நான் உறுதி அளிக்கிறேன். நான் தொடர்ந்து 4 முறை எனது துறை சார்பில் நல் ஆளுமை விருது ரூ.5 லட்சம் பரிசு வாங்கி வருகிறேன். இது எதற்காக கூறுகிறேன் என்றால் எந்தத்துறையானாலும் அதில் முழு ஈடுபாட்டோடு செயல்படுகிறேன்.
வேலூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் பஞ்சம் வந்தபோது காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் ரூ.1215 கோடி உலக வங்கி மூலம் நிதியை ஜெயலலிதா பெற்றுத்தந்து குடிநீர் பஞ்சத்தை தீர்த்து உள்ளார். வாணியம்பாடி முதல் திருப்பத்தூர் வழியாக அரூர் வரை நான்கு வழி சாலை அமைக்க ரூ.246 கோடி ஒதுக்கி விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளோம்.
இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அமைச்சர் கே.சி.வீரமணிக்கு நினைவுப் பரிசுகளும் பொன்னாடைகள் வழங்கி நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். முடிவில் டாக்டர் பிரசன்னா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story