மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி வழங்காததால் நகராட்சி அலுவலகம் முற்றுகை
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில், நிதி வழங்காததால் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கூடலூர்,
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 4 தவணைகளாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடலூர் நகராட்சியை சேர்ந்த சிலர் வீடுகள் கட்டியுள்ளனர். ஆனால் இவர்களுக்கு மத்திய அரசின் நிதி இன்னும் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. சிலருக்கு ஒரு தவணை மட்டுமே பணம் கொடுத்துள்ளனர். இந்தநிலையில் இந்த திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்ட விரும்புவோரிடம் இருந்து மனுக்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதனை அறிந்த 13-வது வார்டு பகுதியை சேர்ந்த திட்ட பயனாளிகள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், புதிதாக வீடுகள் கட்ட மனுக்கள் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் வீடு கட்டிய தங்களுக்கு முழு தொகையை வழங்க வேண்டும். அதன்பிறகே, இந்த திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டுவதற்கு விண்ணப்பதாரர்களிடம் மனு வாங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதேபோல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து பணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story