தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவருக்கு கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி


தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவருக்கு கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 2 Sept 2019 3:45 AM IST (Updated: 2 Sept 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவருக்கு கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் காவரப்பட்டு கிராமம் தெற்குதெருவை சேர்ந்தவர் மேகநாதன். இவருடைய மகன் மகாதேவன்(வயது41). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருந்தார். இணையவழி மூலம் வெளிநாட்டில் வேலை எதுவும் கிடைக்குமா? என அவர் தேடியபோது கனடாவில் வேலைவாய்ப்பு இருப்பதை அறிந்தார். இந்த வேலைக்கு செல்வதற்காக ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ்ஜோடன் என்பவரை இணையவழி மூலம் மகாதேவன் தொடர்பு கொண்டார்.

அப்போது வேலை வாங்கி கொடுக்க பணம் செலுத்த வேண்டும் என கூறியதை தொடர்ந்து இணையவழி மூலம் அவரது கணக்கிற்கு பல தவணைகளில் மகாதேவன் பணம் செலுத்தினார். மேலும் பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த ஜேம்ஸ்ஜோடனை நேரில் சந்தித்தும் பணம் கொடுத்தார். அவரது வங்கி கணக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 19-ந் தேதி வரையிலான காலக் கட்டத்தில் ரூ.23 லட்சத்து 90 ஆயிரத்து 400 வரவு வைக்கப்பட்டது.

வழக்கு

இந்த பணத்தை பெற்று கொண்ட அவர், உங்களது முகவரிக்கு வேலைக்கான அழைப்பு கடிதம் வரும் என கூறிவிட்டு சென்றுவிட்டார். இதை நம்பிய மகாதேவன் பல மாதங்கள் காத்திருந்தும் வேலைக்கான உத்தரவு கிடைக்கவில்லை. இதனால் அவர், ஜேம்ஸ்ஜோடனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த மகாதேவன் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ்ஜோடன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story