சதுர்த்தியை முன்னிட்டு 1,000 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
நெல்லை மாவட்டத்தில் சதுர்த்தியை முன்னிட்டு 1,000 விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
நெல்லை,
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இதுதவிர பொது மக்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் அந்தந்த பகுதி சந்திப்புகளில் விநாயகர் சிலைகளை நிறுவி 1 வாரத்துக்கு பூஜைகள் நடத்துகின்றனர். பின்னர் அந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க உள்ளனர்.
இந்து முன்னணி, பாரதீய ஜனதா, விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் சார்பில் நெல்லை மாவட்டம் முழுவதும் 1,000 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. தென்காசி, சுரண்டையில் நிறுவப்பட்டுள்ள சிலைகள் ஓரிரு நாட்களில் பூஜையை முடித்து நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை மாநகரில் இன்று சிலைகள் அமைக்கப்படுகிறது. 3 அடி முதல் 11 அடி உயரம் வரையிலான சிலைகள் நிறுவப்பட்டு தினமும் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த சிலைகள் அனைத்தும் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூஜைகள் நடத்தி, விஜர்சனம் செய்யப்பட உள்ளன.
நெல்லை டவுன் பகுதிகளில் அமைக்கப்படும் சிலைகள் 8-ந்தேதி பிற்பகல் அந்தந்த பகுதியில் ஊர்வலமாக கொண்டு சென்று, மாலையில் டவுன் தேரடி திடலுக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து எஸ்.என்.ஹைரோடு வழியாக கொக்கிரகுளம் வந்து, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகில் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
பாளையங்கோட்டை பகுதி சிலைகள் சிவன் கோவில் அருகில் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகில் தாமிரபரணி ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு கரைக்கப்படுகிறது.
ஒருசில குக்கிராமங்களில் தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி அந்த பகுதி நீர் நிலையில் கரைக்கிறார்கள். நெல்லை மாநகரில் வீடுகளில் பெரும்பாலானோர் விநாயகர் சிலைகளை வாங்கியும், களிமண்ணால் சிலை செய்தும் வழிபாடு நடத்துகின்றனர். அவர்கள் 3 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை பூஜை நடத்தி சிலைகளை தாமிரபரணி ஆற்றில் கரைக்க உள்ளனர்.
Related Tags :
Next Story