டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 38 ஆயிரம் பேர் எழுதினர்


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 38 ஆயிரம் பேர் எழுதினர்
x
தினத்தந்தி 1 Sep 2019 9:45 PM GMT (Updated: 1 Sep 2019 8:32 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 157 மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 38 ஆயிரத்து 21 பேர் எழுதினர்.

தூத்துக்குடி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் கிளார்க், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நேற்று நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 45 ஆயிரத்து 308 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தூத்துக்குடி தாலுகாவில் 61 தேர்வு மையங்களும், எட்டயபுரத்தில் 6 தேர்வு மையங்களும், கோவில்பட்டியில் 36 தேர்வு மையங்களும், ஓட்டப்பிடாரத்தில் 6 தேர்வு மையங்களும், சாத்தான்குளத்தில் 9 தேர்வு மையங்களும், ஸ்ரீவைகுண்டத்தில் 8 தேர்வு மையங்களும், விளாத்திகுளத்தில் 11 தேர்வு மையங்களும், திருச்செந்தூரில் 20 தேர்வு மையங்களும் என மொத்தம் 157 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 38 ஆயிரத்து 21 பேர் தேர்வு எழுதினர். 7 ஆயிரத்து 287 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வை கண்காணிப்பதற்காக 28 கண்காணிப்பு குழுக்களும், உதவி கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் 17 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

தூத்துக்குடி ஏ.பி.சி.வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வையொட்டி அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார். தூத்துக்குடியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வையொட்டி பழைய பஸ்நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் அறிவுரையின் பேரில் தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல துணை தாசில்தார் தலைமையில் போலீசார் அடங்கிய குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 51 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினர். தேர்வு அமைதியாக, சிறப்பாக நடந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் நேரமும் வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

Next Story