குமரி மாவட்டத்தில் மழை: சிற்றார்-1 அணைப்பகுதியில் 43 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் மழை: சிற்றார்-1 அணைப்பகுதியில் 43 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 1 Sep 2019 11:00 PM GMT (Updated: 1 Sep 2019 8:50 PM GMT)

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சிற்றார்-1 அணைப்பகுதியில் 43 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நாகர்கோவில்,

தெற்கு ஆந்திரா கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனாலும், வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று நேற்று முன்தினம் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று காலை சுமார் 9.30 மணி அளவில் நாகர்கோவில் நகரில் திடீரென மழை கொட்டியது. சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக பெய்த இந்த மழை ஓய்ந்தது. அதன்பிறகு 10 நிமிடம், 15 நிமிட இடைவெளியில் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. 11 மணிக்குப்பிறகு மழை இல்லை. பின்னர் வெயில் காணப்பட்டது.

மாவட்டம் முழுவதும்...

நாகர்கோவிலில் பெய்த மழையினால் கேப் ரோடு, செட்டிகுளம் சந்திப்பு, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி, வடசேரி ரோடு, மீனாட்சிபுரம் ரோடு போன்ற முக்கிய ரோடுகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ரோடுகளில் பெண்கள் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றதை காண முடிந்தது. பலர் மழையில் நனைந்த படி சென்றனர்.

இந்த மழை குமரி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக பெய்திருந்தது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

தண்ணீர் வரத்து

பேச்சிப்பாறை- 29, பெருஞ்சாணி- 22.4, சிற்றார் 1- 43.2, சிற்றார் 2- 9.6, பொய்கை- 5, முக்கடல்- 3, பூதப்பாண்டி- 1.2, களியல்- 4.2, கன்னிமார்- 1.4, கொட்டாரம்- 4.6, மயிலாடி- 10, நாகர்கோவில்- 7.6, சுருளக்கோடு- 16.4, தக்கலை- 2, குளச்சல்- 6.4, இரணியல்- 2.4, பாலமோர்- 20.2, ஆரல்வாய்மொழி- 1, கோழிப்போர்விளை- 9, அடையாமடை- 2.8, குருந்தங்கோடு- 5.6, முள்ளங்கினாவிளை- 10, ஆனைக்கிடங்கு- 6.8 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

இந்த மழையினால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 702 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 386 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 91 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 130 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 689 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 50 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து கொண்டிருப்பதால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

Next Story