குமரி மாவட்டத்தில் சிறப்பு செயலி மூலம் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


குமரி மாவட்டத்தில் சிறப்பு செயலி மூலம் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:30 AM IST (Updated: 2 Sept 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சிறப்பு செயலி மூலம் வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே சரி பார்க்கும் பணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் சிறப்பு செயலி மூலம் வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே சரிபார்க்கும் திட்டப்பணி நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே இந்த பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியான நபர்கள் எவரும் விடுபட்டு விடக்கூடாது என்ற குறிக்கோளுடன் இந்த வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் வாக்களிக்க உரிமையுள்ள எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே வாக்காளர்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை வாக்காளர் உதவி மைய செல்போன் சிறப்பு செயலி, வாக்காளர் உதவி மைய தொலைபேசி எண் 1950, என்.வி.எஸ்.பி. என்ற இணையதளம், வாக்காளர் பொது சேவை மையம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகிய வழிகளில் அவரவர்களது பாஸ்போர்ட், வாகன ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, உழவர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், அரசு அடையாள அட்டை மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணம் ஆகியவற்றின் மூலம் இன்று (நேற்று) முதல் 30-ந் தேதி வரையிலும் சரிபார்த்துக்கொள்ளலாம்.

ஒத்துழைக்க வேண்டும்

மேலும் வாக்காளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் வெளியூரில் இருந்தாலும் அவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்றும் சரிபார்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் வாக்களிக்கும் உரிமை உடையவர்களுக்கும், உறவினருக்கும், பக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் தெரிந்தவர்கள் பெயர்களும் இடம் பெற்றுள்ளதா? என பார்த்து சரிசெய்து கொடுக்க வேண்டும்.

இதன்பிறகுதான் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு எனது பெயர் விடுபட்டுள்ளது, எனது உறவினர் பெயர் விடுபட்டுள்ளது என சொல்வது சரியாக இருக்காது. எனவே வாக்காளர் பட்டியலில் எவரது பெயரும் விடுபட்டுவிடக்கூடாது. அதுமட்டும் அல்லாது தவறான நபர்களின் பெயரும் சேர்ந்து விடாமல் எச்சரிக்கையாக செயல்பட்டு சரியான வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், மாநகராட்சி சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story