கீழணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு குறைப்பு: முழு கொள்ளளவை எட்டுகிறது வீராணம் ஏரி


கீழணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு குறைப்பு: முழு கொள்ளளவை எட்டுகிறது வீராணம் ஏரி
x
தினத்தந்தி 1 Sep 2019 10:45 PM GMT (Updated: 1 Sep 2019 9:22 PM GMT)

வீராணம் ஏரி முழுகொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே கீழணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தங்களை தயார் செய்து வருகிறார்கள்.

காட்டுமன்னார்கோவில், 

காவிரியின் கடைமடையாக விளங்கும் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதிக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியாகும். 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறன. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏரிக்கு அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள 9 அடி கொள்ளளவு கொண்ட கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த மாதம் 15-ந்தேதி நிலவரப்படி ஏரியில் 39.70 அடி தண்ணீர் இருந்தது. ஏரிக்கு நீர் வரத்து எதுவும் இல்லை. தொடர்ந்து நிலவிய வறட்சியால் ஏரியின் நீர்மட்டமும் வேகமாக குறைய தொடங்கியது. அதே நேரத்தில் ஏரிக்கு தண்ணீர் வழங்குவதில் முக்கிய பங்கு வகித்து வரும் கீழணை தண்ணீரின்றி வறண்டு போய் வறட்சியின் கோரபிடிக்குள் சிக்கி இருந்தது. இதனால் சம்பா சாகுபடியை இந்த ஆண்டு மேற்கொள்ள முடியுமா என்கிற நிலைக்கு கடைமடை பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் பெய்த பருவ மழையால் மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்தது. தொடர்ந்து அணையில் இருந்து கடந்த மாதம் 13-ந்தேதி பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் 17-ந்தேதி கல்லணையை வந்தடைந்தவுடன், அங்கிருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட நீர் கடந்த 21-ந்தேதி கீழணையை வந்தடைந்தது. அதன் நீர்மட்டம் 5 அடியை எட்டிய நிலையில் அன்றைய தினமே வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கியது.

இந்த சூழ்நிலையில் தற்போது கீழணைக்கு வரும் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. அதாவது நேற்று முன்தினம் 1000 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று 600 கனஅடியாக குறைந்தது. கீழணையின் நீர்மட்டம் 8 அடியாக இருந்தது. இவ்வாறு நீர்வரத்து சரிந்ததன் காரணமாக வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்ட நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது தொடக்கத்தில் 3 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து இருந்த நிலையில் படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் 1,800 கன அடியாகவும், நேற்று மதியம் 900 கன அடியாகவும் குறைந்தது. ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக இருந்தது. இதன் மூலம் இன்றுக்குள்(திங்கட்கிழமை) வீராணம் ஏரி எப்படியும் முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 45 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது.

நீர்வரத்து குறைந்து இருந்தாலும் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. அதே போல் கீழணையிலும் போதிய அளவில் நீர் இருப்பு இருந்து வருகிறது. எனவே கடைமடை பகுதி டெல்டா விவசாயிகள் தங்களை நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு முறையில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளும் வகையில் முழுவீச்சில் தயார் செய்து வருகிறார்கள். இதற்கான நிலத்தை டிராக்டர், மாடுகளை கொண்டு உழும் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் திறக்கவும் பொதுப்பணித்துறையினர் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

Next Story