திருப்பத்தூரில் சுமை தூக்கும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - பக்கத்து வீட்டு வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு


திருப்பத்தூரில் சுமை தூக்கும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - பக்கத்து வீட்டு வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Sept 2019 4:15 AM IST (Updated: 3 Sept 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் சுமைதூக்கும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் கலைஞர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் மகன் குமரேசன் (வயது 35). இவர், கடைகளுக்குப் பலசரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகளில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஷீலா என்ற மனைவியும், 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.

குமரேசனும், சக தொழிலாளி ஒருவரும் நேற்று மாலை வேலை முடிந்ததும், ஓரிடத்தில் அமர்ந்து கூலிப்பணத்தைப் பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது குமரேசனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் வேலுவின் மகன் சூரியா (20) அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்த குமரேசன், இந்த வழியாக நீ ஏன் செல்கிறாய்? எனக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த குமரேசன், சூரியாவை கையால் அடித்துள்ளார்.

நீ என்னையே அடித்து விட்டாயா? எனக் கேட்டு, கடும் கோபமடைந்த சூரியா நேராக வீட்டுக்கு ஓடிச் சென்று, ஒரு கத்தியை எடுத்து வந்து, குமரேசனை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த குமரேசனை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டு, சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி குமரேசன் பரிதாபமாக இறந்தார்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக குமரேசனின் மனைவி ஷீலா திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய வாலிபர் சூரியாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story