தேனி, ஆண்டிப்பட்டியில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் - இந்து முன்னணி நிர்வாகிகளை வரவேற்ற முஸ்லிம்கள்


தேனி, ஆண்டிப்பட்டியில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் - இந்து முன்னணி நிர்வாகிகளை வரவேற்ற முஸ்லிம்கள்
x
தினத்தந்தி 4 Sept 2019 4:30 AM IST (Updated: 3 Sept 2019 8:41 PM IST)
t-max-icont-min-icon

தேனி, ஆண்டிப்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. ஆண்டிப்பட்டியில் இந்து முன்னணி நிர்வாகிகளை முஸ்லிம்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

தேனி,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதன்படி தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்து எழுச்சி முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று காலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஊர்வலம் தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோவிலில் இருந்து தொடங்கியது. 120-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இதுதவிர சிவன், பார்வதி வேடமணிந்தும் பக்தர்கள் நடனமாடியடி பக்தி பரவசத்துடன் வந்தனர்.

இந்த ஊர்வலம் அல்லிநகரம், பெரியகுளம் சாலை, நேரு சிலை சிக்னல், மதுரை சாலை, அரண்மனைப்புதூர் விலக்கு வழியாக சென்று அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலம் செல்லும் வழியெங்கும் பொதுமக்கள் திரண்டு நின்று சாமி தரிசனம் செய்தனர். ஊர்வலத்தில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்புடன் இந்த ஊர்வலம் நடந்தது.

ஆண்டிப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் மொத்தம் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் அந்த சிலைகள் நேற்று வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. ஆண்டிப்பட்டி கொண்டமநாயக்கன்பட்டியில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.

இந்த ஊர்வலம் வைகை அணை சாலையில் அங்கிருந்த ஒரு மசூதி முன்பாக சென்றது. அப்போது ஊர்வலத்தில் வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை முஸ்லிம்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் சிலைகள் வைகை அணைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

இதில் இந்து முன்னணி தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் செல்வம், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாவட்ட செயலாளர் உமையராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயற்குழு மொக்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story