அரசு பஸ்களில் அதிகாரிகள் திடீர் சோதனை: ‘ஓசி’ பயணம் செய்தவர்களிடம் ரூ.17,530 அபராதம் வசூல்


அரசு பஸ்களில் அதிகாரிகள் திடீர் சோதனை: ‘ஓசி’ பயணம் செய்தவர்களிடம் ரூ.17,530 அபராதம் வசூல்
x
தினத்தந்தி 4 Sept 2019 4:30 AM IST (Updated: 4 Sept 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ஓசி பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.17,530 அபராதம் வசூலிக்கப்பட்டது.



அரசு பஸ்களில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதையும் மீறி சிலர் கூட்ட நெரிசல் இருக்கும் போது டிக்கெட் எடுக்காமல் சென்று விடுகின்றனர். குறிப்பாக டவுன் பஸ்களில் தான் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதாக புகார் வந்தது.

இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆப்ரகாம் உத்தரவின் பேரில் கோவை கோட்டத்திற்கு உட்பட்ட கோவை காந்திபுரம், உக்கடம் மற்றும் பொள்ளாச்சி பஸ் நிலையங்களில் ஒரே நேரத்தில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தில் உதவி மேலாளர் (வணிகம்) மூர்த்தி தலைமையிலும், உக்கடம் பஸ்நிலையத்தில் உதவி பொறியாளர் பழனிசாமி தலைமை யிலும், பொள்ளாச்சியில் கோட்ட மேலாளர் ஜோதி மணிகண்டன், துணை மேலாளர் வாசுதேவன் ஆகியோர் தலைமையிலும் அதிகாரிகள் அரசு பஸ்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்ததும் அதிகாரிகள் உடனடியாக பயணிகளிடம் டிக்கெட் இருக்கிறதா? என்று சோதனை நடத்தினர். அப்போது டிக்கெட் எடுத்த பயணிகள் அதை காண்பித்து விட்டு சென்றனர். இதில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்களை அதிகாரிகள் மடக்கி பிடித்து அபராதம் வசூலித்தனர்.

இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் காந்திபுரத்தில் உள்ள 2 பஸ்நிலையங்கள், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, உக்கடம் ஆகிய பஸ்நிலையங்களில் நேற்று திடீர் சோதனை மேற் கொள்ளப்பட்டது. நேற்று காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சோதனை செய்யப்பட்டது.

காந்திபுரத்தில் உள்ள 2 பஸ்நிலையங்களில் 461 பஸ்களிலும், உக்கடத்தில் 180 பஸ்களிலும், பொள்ளாச்சியில் 137 பஸ்கள் என்று மொத்தம் 778 பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் அதிகாரிகள் மற்றும் 77 டிக்கெட் பரிசோதகர்கள் ஈடுபட்டனர்.

அப்போது டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்தவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் காந்திபுரத்தில் ரூ.9,030, உக்கடத்தில் ரூ.4,400, பொள்ளாச்சியில் ரூ.4,100 என்று மொத்தம் ரூ.17 ஆயிரத்து 530 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

கோவை மண்டலத்தில் கோவை, ஊட்டி, திருப்பூர், ஈரோடு ஆகிய கோட்டங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வாரத்தில் ஒரு நாள், அனைத்து பகுதிகளிலும் சேர்த்து மாதத்தில் ஒரு நாள் திடீர் சோதனை நடத்தப்படும்.

இந்த சோதனை காரணமாக பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படும். அதோடு அனைவரும் டிக்கெட்டு எடுத்து பயணம் செய்வதால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story