கன்னங்குறிச்சியில் தனியார் நிறுவன ஊழியர் கொலை: நிலத்தை விற்று விடுவார் என நினைத்து கல்லால் தாக்கி கொன்றோம்


கன்னங்குறிச்சியில் தனியார் நிறுவன ஊழியர் கொலை:  நிலத்தை விற்று விடுவார் என நினைத்து கல்லால் தாக்கி கொன்றோம்
x
தினத்தந்தி 4 Sept 2019 4:15 AM IST (Updated: 4 Sept 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தை விற்று விடுவார் என்று நினைத்து கல்லால் தாக்கி கொலை செய்தோம் என்று தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் கைதான மகன்கள் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்து உள்ளனர்.

கன்னங்குறிச்சி,

கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 58). இவர் அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது முதல் மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு சக்திகுமார், தாமோதரன் ஆகிய 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக அந்த பகுதியில் 80 சென்ட் விவசாய நிலம் உள்ளது. முனுசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு அன்னதானப்பட்டியை அடுத்த மணியனூர் பொடரான்காடு பகுதியைச் சேர்ந்த சவுதாமணி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார். 2-வது மனைவி மூலம் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் முனுசாமி அன்னதானப்பட்டியில் இருந்து கன்னங்குறிச்சி மன்னார்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது விவசாய நிலத்துக்கு சென்று நிலத்தை பார்த்து உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் அங்கு இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முனுசாமி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த கொலை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு முனுசாமியின் மகன் தாமோதரன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். நேற்று மற்றொரு மகன் சக்திகுமாரும் போலீசில் சிக்கினார். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர். அதில், கன்னங்குறிச்சியில் உள்ள விவசாய நிலத்தை எங்களது தந்தை முனுசாமி பார்த்துக்கொண்டிருந்தார். மேலும் சிலரை அழைத்து வந்து நிலத்தை காண்பித்துக்கொண்டிருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த நாங்கள் அங்கு சென்றோம். அப்போது விவசாய நிலத்தை விற்பதற்காகத்தான் வந்து உள்ளார் என்று நினைத்தோம். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள், கல்லாலும், தடியாலும் தாக்கி, தந்தை முனுசாமியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

Next Story