திருப்பூரில் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிக்கையை பெற வசதி


திருப்பூரில் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிக்கையை பெற வசதி
x
தினத்தந்தி 4 Sept 2019 4:15 AM IST (Updated: 4 Sept 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிக்கையை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு தேர்வுகள் இயக்ககத்தால் 8-ம் வகுப்பு தேர்வு, 10-ம் வகுப்பு தேர்வு, மேல்நிலைத்தேர்வுகள், ஆசிரியர் பட்டயத்தேர்வு மற்றும் தொழில்நுட்ப தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர் உயர்கல்வி படிப்பதற்கோ, வேலைவாய்ப்பிற்கோ செல்லும்போது அவர்கள் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் ஆய்வு செய்வது நடைமுறையில் உள்ளது. மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை வேண்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் இதுவரை சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு மதிப்பெண் சான்றிதழ் அனுப்பப்பட்டு வந்தது.

தற்போது இந்த நடைமுறை எளிதாக்கப்பட்டு அந்தந்த மாவட்ட அளவிலேயே மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறியும் வசதி கடந்த ஆகஸ்டு மாதம் முதல் அரசு தேர்வுகள் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிக்கையை, அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், 5-வது தளம், அறை எண்.518, திருப்பூர்-641604 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இலவசமாக இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். தனியார் நிறுவனங்களுக்கு சான்றிதழ் 1-க்கு ரூ.50 வீதம் அரசு கணக்கில் செலுத்தி மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்த அறிக்கையை பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

Next Story