தஞ்சையில், நீர்மேலாண்மை இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்: அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்


தஞ்சையில், நீர்மேலாண்மை இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்: அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Sept 2019 3:45 AM IST (Updated: 4 Sept 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நீர் மேலாண்மை இயக்க விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் நீர் மேலாண்மை இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவிற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை அமைச்சர் துரைக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள காவிரி நீர் கடைமடை பகுதிகள் வரை சென்றடைந்துள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் மூலம் நீர் மேலாண்மையில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் விவசாயிகளுக்கு மானிய உதவித்திட்டங்கள் மற்றும் சமூக நலம், சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைபேசியும் வழங்கப்பட்டன.

ஊர்வலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி தெற்கு வீதி, மேலவீதி வழியாக கருத்தரங்கம் நடைபெற்ற அரண்மனை வளாகத்தை அடைந்தது. இதில் விவசாயிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ஈச்சங்கோட்டை வேளாண் கல்லுாரி மாணவர்கள், வேளாண்துறை அலுவலர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் மோகன், நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் அறிவியல் மையம் நீடாமங்கலம் ஆகியவற்றின் சார்பாக கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தன.

பின்னர் நடந்த கருத்தரங்கிற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நெடுஞ்செழியன் வரவேற்றார். கருத்தரங்கில் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மைய தலைவர் ராமசுப்ரமணியன், உதவி பேராசிரியர் ராஜாரமேஷ், காட்டுத்தோட்டம் மண் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் பொற்பாவை, பொன்னையா ராமஜெயம் வேளாண்மைக்கல்லூரி முதல்வர் இளஞ்செழியன், விவசாயிகள் அம்மையகரம் தினேஷ், நடுவூர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் ரெட்டிப்பாளையம் மல்லிகா மற்றும் பிரகாஷ் குழுவினரின் நாட்டுப்புறக்கலை மூலம் நுண்ணீர் பாசன திட்டம் பற்றிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குனர்கள் அய்யம்பெருமாள், சாருமதி(தரக்கட்டுப்பாடு), சுதா(பயிர் காப்பீடு) ஆகியோர் செய்திருந்தனர்.

முடிவில் வேளாண்மை துணை இயக்குனர்(மாநில திட்டங்கள்) ஜஸ்டின் நன்றி கூறினார்.

Next Story