கோவில் கும்பாபிஷேக விழா பிரச்சினை: கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


கோவில் கும்பாபிஷேக விழா பிரச்சினை: கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Sept 2019 3:45 AM IST (Updated: 4 Sept 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏற்பட்ட பிரச்சினையால், கிராம மக்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாட்டாமை வெங்கடேஷ் மற்றும் சமுதாய மக்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க போவதாக கூறி, ரேஷன் கார்டுகளை உயர்த்தி பிடித்து கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கிராம மக்களை சமாதானப்படுத்தி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க செய்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

நாங்கள் சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் சமுதாயத்தில் 70 குடும்பங்களாக இருக்கிறோம். எங்கள் ஊரின் மத்தியில் நாராயண சுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் திருவிழா மற்றும் பூஜைகளை அனைவரும் சேர்ந்தே நடத்தி வந்தோம். இதற்கான வரிப்பணமும் சரியாக கொடுத்து வந்துள்ளோம். இந்தநிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு, திருப்பணி செய்ய குடும்பத்துக்கு ரூ.3 ஆயிரம் வரி வசூலிக்க ஊர்க்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வரி வசூலித்து கொடுத்த போது அதனை, மூத்த நிர்வாகிகள் வாங்க மறுப்பதுடன், விரைவில் நடைபெற இருக்கும் கும்பாபிஷேக விழாவிலும் சேர்க்க மறுக்கிறார்கள். நாங்கள் பல ஆண்டுகளாக கோவிலுக்கு வரி செலுத்தி வந்துள்ளோம். எங்களது பெயரில் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை உடைத்து அத்துமீறி செயல்பட்டு வருகின்றனர்.


இதுதொடர்பாக சுரண்டை போலீஸ் நிலையம், ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஊர் கோவில் பிரச்சினையை தீர்த்து, அனைத்து தரப்பினரும் சேர்ந்து கும்பாபிஷேக விழா நடத்தவும், ஊர் ஒற்றுமையாக செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story