திங்கள்நகரில் சாலைகளை சீரமைக்க கோரி இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


திங்கள்நகரில் சாலைகளை சீரமைக்க கோரி இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Sept 2019 4:02 AM IST (Updated: 4 Sept 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

திங்கள்நகரில் சாலைகளை சீரமைக்க கோரி இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இரணியல்,

திங்கள்நகர் பேரூராட்சிக்குட்பட்ட புதுவிளை- பட்டர்விளை சாலை மற்றும் திங்கள்நகர்- பெத்தேல்புரம் சாலை ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளது. தெருவோரம் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளது. மேலும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பல முறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதைத்தொடர்ந்து சேதமடைந்த சாலைகள், மின்விளக்குகளை சீரமைக்கக்கோரியும், குடிநீரை சீராக வினியோகம் செய்ய வலியுறுத்தியும் குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை திங்கள்நகர் பிலாகோடு சந்திப்பு பகுதியில் ஏராளமான இளைஞர் காங்கிரசார் ஒன்று திரண்டனர். பின்னர் சாலைகளை சீரமைக்க கோரியும், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு திங்கள்நகர் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுமன் தலைமை தாங்கினார். குருந்தன்கோடு மேற்கு வட்டார தலைவர் கிளாட்சன், வட்டார துணைத்தலைவர் தேவதாசன், புலவர் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.

அப்போது, பழுதடைந்த சாலைகள் மற்றும் மின்விளக்குகளை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி இரணியல் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story