மீண்டும் கனமழை: தண்டவாளங்கள், சாலைகள் மூழ்கியதால் ரெயில், பஸ் போக்குவரத்து முடங்கியது


மீண்டும் கனமழை: தண்டவாளங்கள், சாலைகள் மூழ்கியதால் ரெயில், பஸ் போக்குவரத்து முடங்கியது
x
தினத்தந்தி 5 Sept 2019 5:45 AM IST (Updated: 5 Sept 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் மீண்டும் கொட்டித்தீர்த்த கனமழையால் ரெயில், பஸ் போக்குவரத்து முடங்கியது. இதனால் வீடு திரும்ப முடியாமல் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.

மும்பை,

மும்பையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பருவமழை வெளுத்து வாங்கியதால் நகருக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் நிரம்பின. கடந்த மாத தொடக்கத்தில் பெய்த பலத்த மழையால் மக்கள் பரிதவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மும்பையில் மழையின் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் மழை தலைகாட்ட தொடங்கியது. இந்த மழை நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கொட்டி தீர்த்தது. நேற்று காலையிலும் தொடர்ந்த பேய் மழை பிற்பகல் 3 மணி வரை இடைவிடாமல் பெய்தது. அதன்பிறகும் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது.

இதனால் மும்பை நகரம் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. பஸ் போக்குவரத்து முடங்கியது. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி ஆங்காங்கே நின்றன.

மும்பை நகரின் போக்குவரத்து உயிர் நாடியான மின்சார ரெயில் சேவை முடங்கியது. தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்ததால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல ரெயில்கள் ஆங்காங்கே நடு வழியில் நின்றன. இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமலும், வீடு திரும்ப முடியாமலும் பயணிகள் பரிதவித்தனர். ஜெய்ப்பூர்- மும்பை துரந்தோ விரைவு ரெயிலும் மழை வெள்ளத்தில் சிக்கி கொண்டது. வைத்தர்ணா ரெயில் நிலையம் அருகே அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. மும்பையில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் ரெயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.

இரவிலும் ரெயில் சேவை சீரடையாததால் ஆயிரக்கணக்கான பயணிகள் வீடு திரும்பாமலேயே பரிதவிக்க வேண்டியதாயிற்று. விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. விமானங்கள் சராசரியாக 25 நிமிடம் தாமதமாக இயக்கப்பட்டன.

மும்பையில் உள்ள மித்தி நதியில் அபாய கட்டத்தை நெருங்கியபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். பள்ளிகளுக்கு சென்ற குழந்தைகள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். குழந்தைகள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை பள்ளி முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டது.

கனமழையினால் மும்பையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பருவமழை காலத்தில் ஏற்கனவே பல தடவை வெள்ளப்பாதிப்பை சந்தித்த மும்பை நகரம் மீண்டும் வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.

இதேபோல மும்பையை அடுத்த தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. மேலும் மாநிலம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கட்சிரோலி, கோண்டியா மாவட்டங்களில் 100 கிராமங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மழையின் காரணமாக மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலார்ட்’ விடுத்து இருந்தது. இந்த மாவட்டங்களில் இன்றும் ‘ரெட் அலார்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது. 

Next Story