தமிழக பொருளாதாரத்தை உயர்த்த முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம் - சிதம்பரத்தில் ஜி.கே.வாசன் பேட்டி


தமிழக பொருளாதாரத்தை உயர்த்த முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம் - சிதம்பரத்தில் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 4 Sep 2019 10:45 PM GMT (Updated: 4 Sep 2019 8:07 PM GMT)

தமிழக பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதாக சிதம்பரத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.

சிதம்பரம்,

சிதம்பரம் கீழவீதியில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்று மதியம் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி போன்ற ஆறுகளில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவுப்படி இந்த மாதம் (செப்டம்பர்) கர்நாடக அரசு 40 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். இதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளில் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் இடைவிடாமல் கொடுக்க வேண்டும். தமிழக பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

முன்னதாக ஜி.கே.வாசன் திட்டக்குடி அருகே ஆவினங்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கல்வித்துறையை பொறுத்தவரை மாணவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை கல்வித்துறை அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். கல்வித்துறையின் நல்ல திட்டங்களுக்கு ஏதுவாக தனியார் துறையும் அரசுடன் இணைந்து குழந்தைகளுடைய வருங்கால வளர்ச்சிக்கு உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும்.

கல்வி சாலைகளை கிராமப்புறங்களில் தொடங்குபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும், ஆவினங்குடி போன்ற கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ள பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும் அரசு மற்றும் கல்வித்துறை உதவிகரமாக செயல்பட வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு இயக்கத்தை பலப்படுத்த தமிழ் மாநில காங்கிரஸ் அனைத்து மாவட்டங்களிலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். உள்ளாட்சி தேர்தல் பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். அதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் செய்ய தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story