கோவை மாவட்டம் முழுவதும் 1,509 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன
கோவை மாவட்டம் முழுவதும் 1,509 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
கோவை,
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பா.ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத்சேனா உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவை மாநகரப் பகுதியில் 372 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதேபோல் புறநகர் பகுதிகளில் 1,400 சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. இதுதவிர பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிலைகள் வைத்துப் பூஜை செய்தனர்.
இதில் குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 159 விநாயகர் சிலைகள் மேளத் தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவை குறிச்சி மற்றும் குனியமுத்தூர் குளங்களில் கரைக்கப்பட்டன. இதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் தலைமையில் 1,000-த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தை காண பொதுமக்கள் குவிந்தனர். ஊர்வலத்தை ஒருசிலர் தங்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
சூலூர் இந்து முன்னணி சார்பில் 20 சிலைகளும், தமிழக விசுவ இந்து பரிஷத் சார்பில் 32 சிலைகளும், தேசிய விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 6 சிலைகளும், இந்து மக்கள் கட்சி சார்பாக 2 சிலைகளும் மற்றும் பொதுமக்கள் சார்பாக சுமார் 39 சிலைகளும் சூலூர் நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்டது. முன்னதாக விநாயகர் ஊர்வலம் சூலூர் அண்ணா சீரணி கலையரங்கத்தில் தொடங்கி கலங்கல் சாலை வழியாக அமர்ஜோதி நகர் வழியாக நொய்யல் ஆற்றங்கரைக்கு வந்தடைந்தது. முன்னதாக அண்ணா சீரணி கலையரங்கத்தில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி மற்றும் அ.தி.மு.க. நகரச் செயலாளர் கார்த்திகை வேலன், தமிழக விசுவ இந்து பரிஷத் மாநகர் மாவட்ட தலைவர் குமரேசன், மண்டல தலைவர் வக்கீல் விஜயகுமார், ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கவுண்டம்பாளையம், துடியலூர், கோவில்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், இந்து மகாசபை, இந்து மக்கள் கட்சி, பாரத்சேனா மற்றும் பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட சிலைகள் துடியலூரை அடுத்து உள்ள வெள்ளக்கிணர் பகுதியில் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்ட குட்டையில் கரைக்கப்பட்டன. முன்னதாக ஊர்வலத்தை இந்து முன்னணி செயலாளர் கிஷோர் தொடங்கி வைத்தார்.
இதில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன், நிர்வாகிகள் ஜெய்கார்த்திக், முருகானந்தம், கோவிந்தன், அசோக், சரவணன், பா.ஜனதா முன்னாள் கவுன்சிலர் வத்சலா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல விசுவ இந்து பரிஷத் சார்பில் கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயல் தலைவர் ஜாக்கி (எ) செல்வம், மாவட்ட பொருளாளர் இடிகரை குணசேகரன், பஜ்ரங்கள் மாவட்ட அமைப்பாளர் சிவசக்தி பாரதி, சிவலிங்கம், சரவணன், நாகராஜ், நந்து, செந்தில் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 74 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையடுத்து விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை ஆதவன் பிரமோட்டர்ஸ் உரிமையாளர் பி.சதீஸ்குமார் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பா.ஜனதா கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, ஜி.வி.மாதையன், என்.எஸ்.வி. ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுக்கூட்டம் நடைபெறும் வீரகார்த்திகேயன் திடலை அடைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்திற்கு கோவை கோட்ட இந்து முன்னணி செயலாளர் பி.ராஜ்குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் வரவேற்றார். மாநில செயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார், ராமன், செந்தூர்பாண்டியன் ஆகியோர் பேசினார்கள். முடிவில் தனபால் நன்றி கூறினார்.
பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் பங்களாமேடு ஊட்டி மெயின்ரோடு, பழைய நகராட்சி அலுவலக வீதி வழியாகச்சென்று பவானி ஆற்றங்கரையை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைக்கு பின்னர் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
இதையொட்டி கோவை வெள்ளலூர் அதிவிரைவுப்படை கமாண்டோ ஜெயசீலன், துணை கமாண்டோ சிங்காரவேல், உதவி கமாண்டோ கிருஷ்ணமூர்த்தி, நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் துணைசூப்பிரண்டுமோகன்நவாஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் காரமடையில் இந்து முன்னணி கிழக்கு ஒன்றியம் சார்பில் சார்பில் வைக்கப்பட்டிருந்த 89 சிலைகள் கன்னார்பாளையம் வீரசிவாஜி திடலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் சிவபுகழ் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 35 சிலைகள் கனுவாய்ப்பாளையம் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டு ஒன்றிய செயலாளர் மந்திரி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதேபோன்று விசுவ இந்து பரிஷத் சார்பில் 11 சிலைகளும், இந்து மக்கள் கட்சி சார்பில் 19 விநாயகர் சிலைகளும், பில்லூர் டேம், காரமடையில் பொதுமக்கள் சார்பில் 12 சிலைகளும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காரமடை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா உத்தரவின் பேரில் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன், கணேசன், ராயப்பன், நெல்சன், சுரேந்திரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், ஆணைமலை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குளம் மற்றும் ஆறுகளில் கரைக்கப்பட்டன.
நேற்று கோவை மாநகரில் 159 சிலைகளும், புறநகர் பகுதியில் 1,350 சிலைகளும் என மொத்தம் 1,509 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
Related Tags :
Next Story