வேதாரண்யத்தில், விடிய விடிய கன மழை - உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. இதன் காரணமாக உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவுக்கு உட்பட்ட அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தியில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யம் திகழ்கிறது. கடந்த ஆண்டு (2018) ஏற்பட்ட கஜா புயலால் உப்பளங்களில் கடல் சேறு புகுந்தது.
1 அடி உயரத்துக்கு கடல் சேறு உப்பளங்களில் தேங்கி இருந்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 40 சதவீத உப்பள பகுதியில் மட்டும் நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள உப்பளங்கள், புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை.
கடந்த மாதம் காற்றின் தாக்கம் காரணமாக உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்யப்பட்ட பாத்திகளில் கடல் நீர் புகுந்து, பாதிப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வேதாரண்யம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய கன மழை விடிய விடிய நீடித்தது.
நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யம் பகுதியில் 64.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தலைஞாயிறில் 53 மில்லி மீட்டர் மழை பதிவானது. வேதாரண்யம் அருகே புதுபள்ளி பகுதியில் பெய்த மழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.
இந்த மழை நெல் சாகுபடிக்கு உதவும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க 15 நாட்களுக்கு மேலாகும் என்றும், உப்பு இருப்பு குறைந்து விட்டதாலும், விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும் உற்பத்தியாளர்கள் தெரிவித் தனர்.
உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால் உப்பளங்களில் பணியாற்றி வந்த 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். உப்பளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலை ஓரங்களில் சேமித்து வைத்துள்ள உப்பை விற்பனைக்கு அனுப்பும் பணி மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.
Related Tags :
Next Story