கடத்தூர் பகுதியில், விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை


கடத்தூர் பகுதியில், விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 5 Sept 2019 3:30 AM IST (Updated: 5 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

கடத்தூர் பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மொரப்பூர், 

தர்மபுரி மாவட்டம் கடத்தூர், மொரப்பூர், கம்பைநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. மானாவாரியாக பயிரிடப்பட்ட தக்காளிகள் விளைச்சல் அமோகமாக உள்ளது. இந்த தக்காளிகளை விவசாயிகள் அறுவடை செய்து கடத்தூர், கம்பைநல்லூரில் உள்ள மார்க்கெட்டுக்கு காய்கறி விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

விவசாயிகளிடம் தக்காளியை வியாபாரிகள் வாங்கி திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்களில் அனுப்பி வருகின்றனர். கடத்தூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் மார்க்கெட்டுக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையாக ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடத்தூர் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளோம். இந்தாண்டு விளைச்சல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு தக்காளிகள் வரத்து அதிகரித்துள்ளது. கடத்தூர் மார்க்கெட்டில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.700-க்கு விற்பனையானது. சில்லறையாக ஒரு கிலோ ரூ.30 வரை விற்றது.

தற்போது கடத்தூர் பகுதியில் 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை ரகத்திற்கு ஏற்ப விலை போனது. விலை குறைவால் தக்காளியை வியாபாரிகள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டு விடுகின்றனர். தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story