வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் - இந்து முன்னணியினர் ‘திடீர்’ சாலை மறியல்


வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் - இந்து முன்னணியினர் ‘திடீர்’ சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Sept 2019 3:45 AM IST (Updated: 5 Sept 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகரில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின்போது இந்து முன்னணியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, பல்வேறு அமைப்புகள், இளைஞர்கள் சார்பில் முக்கிய இடங்களில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய வடிவிலான விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வேலூர் மாநகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம் (விசர்ஜனம்) கோலாகலமாக நேற்று நடந்தது. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மாநகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் வாகனங்களில் அங்கு கொண்டு வரப்பட்டன.

ஊர்வலத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கலையரசு தலைமை தாங்கினார். இந்து முன்னணி கோட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட துணை தலைவர்கள் சீனிவாசன், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா கலந்து கொண்டு ஊர்வலத்தின் நோக்கம் குறித்து பேசினார். ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, ஸ்ரீபுரம் இயக்குனர் எம்.சுரேஷ்பாபு ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

இதில், சாந்தாசுவாமிகள், அப்பாஜி சுவாமிகள் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், அ.ம.மு.க. வேலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்புபால் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தின் முன்பாக ஏராளமான இளைஞர்கள் ஆடிக்கொண்டு உற்சாகமாக சென்றனர். ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டின் மாடியில் நின்று வேடிக்கை பார்த்தனர். ஊர்வலத்தில் வந்த விதவிதமான விநாயகர் சிலைகளை பலர் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் சிலர் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

ஊர்வலமானது காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை மெயின் பஜார், கிருபானந்த வாரியார் சாலை, லாங்கு பஜார், பில்டர்பெட் சாலை வழியாக அண்ணா கலையரங்கத்தை மாலை 4.30 மணியளவில் வந்தடைந்தது. சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் ஊர்வலம் கோட்டை சுற்றுச்சாலை வழியாக மாங்காய் மண்டி அருகே சென்றது. அங்கிருந்து கொணவட்டம் வழியாக ஊர்வலம் செல்லாதபடி போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதையடுத்து மாங்காய் மண்டியில் இருந்து ராகவேந்திராநகர் வழியாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலைக்கு ஊர்வலம் வந்தது. அப்போது இந்து முன்னணியினர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சதுப்பேரி ஏரிக்கு சென்றால் அதிக தூரம் செல்ல வேண்டும். எனவே சர்வீஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இந்து முன்னணியினர் திடீரென சர்வீஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் விநாயகர் சிலை வாகனங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார், அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. ஆனால் சர்வீஸ் சாலை வழியாக தான் செல்வோம் என்று கூறி அவர்கள் சிலைகளை எடுத்துச் செல்லவில்லை. தகவல் அறிந்த வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் சர்வீஸ் சாலையில் செல்ல அனுமதி வழங்கினார்.

பின்னர் சர்வீஸ் சாலை வழியாக ஊர்வலம் சதுப்பேரி ஏரிக்கு சென்றது. அங்கு மாநகராட்சி சார்பில் 30 அடி அகலம், 15 அடி ஆழத்தில் தற்காலிக குளம் அமைக்கப்பட்டிருந்தது. அதனை சுற்றி தடுப்பு வேலியும், மின்விளக்கு வசதியும், வாகனங்கள் வந்து செல்வதற்கான பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விநாயகர் சிலைகள் 2 கிரேன்கள் மூலம் கரைக்கப்பட்டன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொற்செழியன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊர்வலம் செல்லும் பாதைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணித்தனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் ஊர்வலம் செல்லும் பாதையில் வெடிகுண்டுகள் ஏதேனும் உள்ளதா? என்று சோதனை செய்தனர். மேலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்பட்டது. ஊர்வலத்தின் பின்னால் வஜ்ஜிரா வாகனமும் சென்றது.

நாட்டறம்பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய பஸ் நிலையம், வணிக நிறுவனங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விநாயர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து நேற்று புதிய பஸ் நிலையம் பகுதியில் வைத்திருந்த அனைத்து விநாயகர் சிலைகளும் வணிக வளாகம் அருகில் எடுத்து வரப்பட்டது. பின்னர் அங்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து மேளதாளம் முழங்க சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

Next Story