வால்பாறையில் விடிய, விடிய பெய்த கனமழையால், சோலையார் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 1 அடி உயர்வு
வால்பாறையில் விடிய விடிய பெய்த கனமழையால் சோலையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்தது.
வால்பாறை,
வால்பாறை பகுதியில் பெய்யும் மழையால் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளுக்கும் ஓரளவிற்கு தண்ணீர் வரத்து இருந்து கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 11 -ந் தேதி 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார்அணை தனது முழுகொள்ளளவான 160 அடியை தாண்டியது.இதனால் சோலையார் மின்நிலையம்-1 மற்றும் இரண்டு ஆகிய மின்நிலையங்கள் இயக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அணையிலிருந்து தானாகவே தண்ணீர் வெளியேறக்கூடிய சேடல்பாதை வழியாகவும், சோலையார் மின்நிலையம் -1 இயக்கப்பட்டும் வெளியேறக்கூடிய தண்ணீர் முழுவதும் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்பட்டது.
பரம்பிக்குளம் அணையிலிருந்து மின்உற்பத்திக்குப் பின் வெளியாகும் தண்ணீர் ஆழியார் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.இதனால் காய்ந்து போய் கிடந்த ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு வருகிறது.வால்பாறை பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.இதனால் கடந்த 25 நாட்களாக சோலையார்அணை 160 அடியை தாண்டிய நிலையில் இருந்து வருகிறது. தொடர்ந்து சேடல்பாதை வழியாக தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு சென்று வருகிறது.இந்த நிலையில் வால்பாறை பகுதி முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று முன்தினம் மாலை 4 மணிமுதல் தொடங்கிய கனமழை விடியவிடிய பெய்தது.இதனால் சோலையார்அணை ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 162 அடியை தாண்டியது. இந்த கனமழை காரணமாக ஆங்காங்கே சாலை ஓரங்களில் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டிவருகிறது.
இதே போல தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் கேரள வனப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் வால்பாறையில் 36 மி.மீமழையும், சோலையார்அணையில் 31 மிமீமழையும், சின்னக்கல்லாரில் 37 மி.மீமழையும்,நீராரில் 49 மி.மீமழையும் பெய்துள்ளது.சோலையார்அணைக்கு விநாடிக்கு 2912.50 கனஅடித்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோலையார்மின்நிலையம்-1லிருந்து 484 கனஅடித்தண்ணீரும்,சேடல்பாதை வழியாக 1624 கனஅடித்தண்ணீரும், பரம்பிக்குளம் அணைக்கு சென்றுவருகிறது. சோலையார்மின்நிலையம்-2 இயக்கப்பட்டு 499 கனஅடித்தண்ணீர் கேரளாவிற்கும் திறந்துவிடப்பட்டுவருகிறது.
சோலையார்அணையின் நீர் மட்டம் 162.02 அடியாக உள்ளது.
Related Tags :
Next Story