பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள பணத்தை வட்டியுடன் வசூலிக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள பணத்தை வட்டியுடன் வசூலிக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Sept 2019 5:00 AM IST (Updated: 5 Sept 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள பணத்தை வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அன்பழகன் (அ.தி.மு.க.) பேசியதாவது:-

இந்த பட்ஜெட்டில் புதுவை மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல எந்த திட்டமும் இல்லை. இது வெற்று உரையாக உள்ளது. புதுவைக்கு மாநில அந்தஸ்து, நிதிக்குழுவில் சேர்த்தல், கடன் தள்ளுபடி, ஓய்வூதியர் பென்சனை மத்திய அரசை ஏற்க செய்வது, ஆண்டுக்கு 10 சதவீதம் நிதியை உயர்த்தி கொடுத்தல் ஆகியவற்றை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருக்கும் போதே செய்திருக்கலாம். நமது முதல்-அமைச்சர் மத்திய மந்திரியாக இருக்கும்போது அதை செய்திருக்கலாம். தற்போது மத்திய அரசையும், கவர்னரையும் குறைகூறி வருகின்றீர்கள். அமைச்சரவை கூட்டத்தில் கவர்னரின் செயலாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் கடந்த ஒரு வருடமாக கவர்னரின் செயலாளர் இல்லாமலேயே அமைச்சரவை கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகளுக்கு கவர்னருக்கு அக்கறை இன்மையை காட்டுகிறது.

புதுவையில் இருந்து ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை நாம் வருவாயாக மத்திய அரசுக்கு கொடுக்கிறோம். ஆனால் மத்திய அரசு நமக்கு தருவது ரூ.1545 கோடி மட்டுமே. எனவே புதுவை மாநிலத்தை நிதிக்குழுவில் சேர்க்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் மொத்தம் 37,224 அரசு பணியிடங்கள் உள்ளன. அதில் 8,980 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவை நிரப்பப்பட்டால் மாநில வருவாயில் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பென்ஷன் வழங்குவதிலேயே பற்றாக்குறை ஏற்படும். எனவே அரசு பொருளாதார வல்லுனர்களை அமைத்து வருவாய் பெருக்கம் மற்றும் வீண் செலவீனங்களை தவிர்க்க வேண்டும்.

கலால்துறை, வருவாய்துறை, மின்துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்ட காலமாக வசூலிக்கப்படாமல் ரூ.750 கோடிக்கு மேல் நிலுவை தொகை உள்ளது. இதனை வட்டியுடன் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கலால்துறையில் ஒரு கார்ப்பரேஷன் அமைத்தால் ஆண்டுக்கு குறைந்தது ரூ.400 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும். அதை அமைக்க அரசு முன்வரவில்லை. அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதுவையில் அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

ஒரு விழாவில் பேசும் போது முதல்-அமைச்சர் கூட இது தொடர்பாக கவலையை தெரிவித்தார்.. அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் அரசு வழங்குகிறது. அவ்வாறு வழங்கினால் அவர்கள் எவ்வாறு தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பார்கள். இது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். புதுவையில் உள்ள 12 அரசு சார்பு நிறுவனங்களில் 2 நிறுவனங்கள் மட்டுமே நஷ்டம் இல்லாமல் இயங்குகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு பணம் ஒதுக்கியும் மாநில அரசு தனது பங்கை செலுத்தாததால் உருப்படியாக திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

தற்போது புதுவை, காரைக்கால் என 2 மாவட்டங்கள்தான் உள்ளது. இதனை 4 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும். அரசுக்கு இன்னும் 20 மாதங்கள் தான் உள்ளது. இந்த காலத்தை ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல்படுத்தினால் மக்கள் நலன்பயக்கும் திட்டங்களை கொண்டு வர முடியும். எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளை ஏற்று அடுத்த ஆண்டிலாவது சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story